வங்கியில் வேலை கிடைக்காததால், போலி வங்கியை ஆரம்பித்த இளைஞன்! பன்ருட்டியில் பரபரப்பு

கடலூர் மாவட்டம், பன்ருட்டியில் போலியாக ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (எஸ்.பி.ஐ) வங்கி கிளையை நடத்தி வந்த பலே ஆசாமிகளை போலிஸார் கைது செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னாள் எஸ்பிஐ வங்கி ஊழியரின் மகன் கமல் பாபு (வயது 19). இவர், ஏ.குமார் (வயது 42), மற்றும் எம்.மாணிக்கம் (வயது 52) ஆகியோருடன் இணைந்து போலியாக வங்கி கிளையை தொடங்கியுள்ளனர். கிளை அமைப்பதற்காக கணினிகள், லாக்கர்கள், சலான்கள் மற்றும் போலி ஆவணங்கள் போன்றவற்றை தனது தொடர்புகளை பயன்படுத்தி கமல் பாபு கொள்முதல் செய்துள்ளார். அதோடு, எஸ்.பி.ஐ. வங்கியின் பன்ருட்டி பஜார் கிளை என்ற பெயரில் ஒரு வலைத்தளமும் உருவாக்கப்பட்டுள்ளது.

பன்ருட்டியில் வடக்கு பஜாரில் புதிதாக எஸ்.பி.ஐ வங்கி கிளை தொடங்கப்பட்டிருப்பது குறித்து எஸ்.பி.ஐ வங்கி வாடிக்கையாளர் ஒருவர், ஏற்கெனவே இருக்கிற எஸ்.பி.ஐ வங்கி கிளையின் மேலாளரிடம் விசாரித்தபோது இந்த வங்கி பற்றி தெரிய வந்தது. மேலாளரும் பிற அதிகாரிகளும் போலி கிளையை பார்வையிட்டனர்.

அங்கே ஒரு உண்மையான எஸ்.பி.ஐ வங்கி கிளைக்கு தேவையான அனைத்து பொருட்களுடன் அசல் எஸ்.பி.ஐ வங்கி கிளையை போல இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து, அவர்கள் உடனடியாக பன்ருட்டி போலீசில் புகார் அளித்தனர். இதைத்தொடர்ந்து, இந்த கமல் பாபு, ஏ.குமா, எம்.மாணிக்கம் ஆகிய 3 பேரும் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு, 473, 469, 484, 109 பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

கைதான ஏ.குமா, கமல் பாபு, எம்.மாணிக்கம்

இது குறித்து பன்ருட்டி காவல் ஆய்வாளர் அம்பேத்கர் கூறியதாவது

“பாபுவின் பெற்றோர் முன்னாள் எஸ்பிஐ வங்கி ஊழியர்கள். பாபு சிறிய வயதிலிருந்தே அனைத்து வங்கி நடவடிக்கைகளையும் கற்றுக்கொண்டுள்ளார். எனவே, அவர் ஒரு போலி கிளையைத் திறக்க முயற்சி செய்தார். அவரது தந்தை சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். அவரது தாயார் ஓய்வு பெற்றார். அவரது தந்தை இறந்த பிறகு, அவர் வாரிசு அடிப்படையில் வேலைக்கு விண்ணப்பித்திருந்தார்.

அவரது விண்ணப்பம் குறித்த நடவடிக்கை தாமதமானதால் விரக்தியடைந்தார். எனவே அவரே ஒரு வங்கியைத் திறக்க முடிவு செய்துள்ளார். இந்த போலி வங்கி கிளையில் பணத்தை இழந்ததாக வாடிக்கையாளர்களிடமிருந்து எங்களுக்கு எந்த புகாரும் வரவில்லை. இது குறித்து விசாரணை நடந்து வருகிறது.” என்று கூறினார்.

பன்ருட்டியில் போலியாக எ.பி.ஐ. வங்கி கிளையைத் தொடங்கி நடத்தி வந்தவர்களை போலீசார் கைது செய்திருப்பது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

guest
0 Comments
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x