“மக்களை நேரடியாக குறை கூறுவது தவறு!” கிரண்பேடியின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த பாஜக !
இலவச கிசிச்சை தொடர்பாக துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்த கருத்து மத்திய அரசுக்குக் களங்கம் ஏற்படுத்துவதாக உள்ளது என்று பாஜக குற்றம் சாட்டியுள்ளது.
“புதுச்சேரியில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இச்சூழலில் தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் சட்டத்தை மீறுவோர் எப்படி இலவச சிகிச்சை கேட்க முடியும்?, சில கோடி பேர் மட்டுமே வருமான வரி செலுத்துகின்றனர். ஆனால் பொறுப்பற்று வருமான வரி கட்டாமல் இருப்போரையும் அரசு நிர்வகிக்க வேண்டி உள்ளது” என்று கடுமையாக துணைநிலை ஆளுநர் கிரண்பேடி விமர்சித்திருந்தார்.
இந்நிலையில், புதுச்சேரி பாஜக மாநிலத்தலைவரும், எம்எல்ஏவுமான சாமிநாதன் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், “மக்களை நேரடியாக துணைநிலை ஆளுநர் கிரண்பேடி குறை கூறுவது தவறு. மக்களுக்கு வழிகாட்ட வேண்டியது அரசும், ஆளுநரும்தான். மத்திய அரசுக்குக் களங்கம் ஏற்படுத்தும் செயலாக ஆளுநரின் கருத்து அமைகிறது. ஏழை, நடுத்தர மக்கள் தொடர்ந்து பல மாதங்களாக வருமானமின்றி பொருளாதாரச் சிக்கலுடன் கொரோனா நோய் தொற்று பயத்தில் தடுமாறிக் கொண்டுள்ளனர். இந்நிலையில், இலவச சிகிச்சையை எப்படிக் கேட்க முடியும் என்ற ஆளுநரின் கருத்து தேவையில்லாத சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசுக்குக் களங்கம் ஏற்படுத்தும் செயலாக உள்ளது. இலவச மருத்துவத்தை இல்லாது செய்தால் என்ன செய்வது என்று பேசுவது ஏற்புடைய செயல் அல்ல. இது பிரதமரையும் மத்திய அரசையும் பெருமைப்படுத்தும் செயலும் அல்ல.” என்று துணைநிலை ஆளுநர் கிரண்பேடியின் விமர்சனம் குறித்து அறிக்கையில் சாமிநாதன் தெரிவித்துள்ளார்.