“இஸ்ரேல் மீதான தாக்குதல் சரிதான். ஆனால், எங்களுக்கு அதில் பங்கில்லை” ஈரான் திட்டவட்டம்
ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லாஹ் அலி கமேனி இஸ்ரேலுக்கு எதிரான ஹமாஸின் தாக்குதலைப் பாராட்டியுள்ளார். அதேசமயம், அந்த தாக்குதலில் ஈரானின் தலையீடு இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
சில தினங்களுக்கு முன் அமெரிக்காவின் வால் ஸ்ட்ரீட் ஜேர்னல் பத்திரிக்கையில் வெளியான செய்தியில், “ஈரானிய பாதுகாப்பு அதிகாரிகளே, ஹமாஸின் தாக்குதலைத் திட்டமிடுவதற்கு உதவினார்கள் . பெய்ரூட்டில் நடந்த கூட்டத்தில், இஸ்ரேல் மீதான தாக்குதலுக்கு ஈரான் அதிகாரிகள் பச்சைக்கொடி காட்டினார்கள்.” என்றும் செய்தி வெளியாகி இருந்தது.
இதை திட்டவட்டமாக ஈரான் உச்ச தலைவர் அயதுல்லாஹ் அலி கமேனி மறுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது,
” நிச்சயமாக, நாங்கள் பாலஸ்தீனத்தை ஆதரிக்கிறோம். அதன் தற்காப்பு போராட்டங்களை ஏற்கிறோம். முழு இஸ்லாமிய உலகமும் பாலஸ்தீனியர்களை ஆதரிக்க வேண்டும்.
இஸ்ரேல் சியோனிச ஆதரவாளர்கள் , கடந்த சில நாட்களாக ஈரான் குறித்து வதந்திகளை பரப்பி வருகின்றனர். இஸ்ரேலுக்கு எதிரான தாக்குதலில் ஈரானும் சம்பந்தப்பட்டுள்ளது என்று கூறுகின்றனர். அது உண்மையல்ல. நாங்கள் இதில் பங்கேற்கவில்லை. ஆனால் இந்த தாக்குதலை பாராட்டுகிறோம்.
இதனால், இராணுவம் மற்றும் உளவுத்துறை ஆகிய இரண்டிலும் இஸ்ரேல் சீர்படுத்த முடியாத தோல்வியை சந்தித்துள்ளது. இஸ்ரேல் இந்த தோல்வியை சரிசெய்ய முடியாது.”
இவ்வாறு ஈரான் உச்ச தலைவர் அயதுல்லாஹ் அலி கமேனி தெரிவித்துள்ளார்.