‘பீலா ’ பதவிக்கு வருகிறாரா ராதா?
தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கொரோனா தடுப்புப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டிருந்த நிலையில், திடீரென அவர் ஓரங்கட்டப்பட்டார். இந்த கருத்து இணையத்தில் தொடங்கி, டீ க்கடைகள் வரை பேசப்பட்டது. இந்நிலையில், விஜயபாஸ்கர் ஓரங்கட்டப்பட்ட பின் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷை அந்த இடத்துக்குக் கொண்டு வந்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
ஒவ்வொரு நாளும், விதவிதமான சேலையில் வந்து பேட்டிக்கொடுத்துக் கொண்டிருந்த பீலா ராஜேஷ், ஏப்ரல் 10 ஆம் தேதி திடீரென ஆஃப் செய்யப்பட்டார். பீலாவுக்கு பதிலாக, தலைமைச் செயலாளர் சண்முகமே தேனாம்பேட்டை டி.எம்.எஸ். அலுவலகத்துக்கு வந்து செய்தியாளர்களை சந்தித்து பேட்டி கொடுத்தார். அவருக்குப் பின்னால் பீலா ராஜேஷ் மாஸ்க் பொருத்திக் கொண்டு மௌனமாக நின்றார். இதில் முக்கிய அரசியல் இருப்பதாக கோட்டை வட்டாரத்தில் பேசப்படுகிறது. பீலா ராஜேஷை பதவி மாற்றிவிட்டு, அந்த இடத்தில் முன்னாள் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனே மீண்டும் கொண்டு வரப்படுவதற்கான அறிகுறிதான் இது என்கின்றனர் விபரம் அறிந்தவர்கள்.
இது தொடர்பாக டி.எம்.எஸ். , கோட்டை வட்டாரங்களில் விசாரித்தபோது, “விஜயபாஸ்கருக்கும் முன்னாள் சுகாதாரத் துறை செயலாளராக இருந்த ராதாகிருஷ்ணனுக்கும் இடையே எந்த முரண்பாடும் இல்லை. ஆனாலும் ஜெயலலிதா மரணம் குறித்து ராதாகிருஷ்ணன் வெளிப்படையாக பேசிய தகவல்கள், அதற்கு சிவி சண்முகம் போன்ற அமைச்சர்கள் தெரிவித்த எதிர்ப்பு காரணமாக ராதாகிருஷ்ணன் சுகாதாரத் துறை செயலாளர் பதவியில் இருந்து மாற்றப்பட்டார். அப்போது அதே துறையில் சித்தா, ஆயுர்வேத ஆணையராக இருந்த டாக்டர் பீலா ராஜேஷை அமைச்சர் விஜயபாஸ்கர்தான் துறைச் செயலாளராகக் கொண்டு வந்தார். துறை அமைச்சருக்கு வசதியான நபர் துறைச் செயலாளராக இருக்கட்டும் என்று முதல்வரும் அதில் தலையிடவில்லை.
இந்த நிலையில்தான் விஜயபாஸ்கரின் மீதான அதிருப்தியால் அவரை சற்று ஒதுக்கி வைத்து பீலா ராஜேஷுக்கு முக்கியத்துவம் கொடுத்தார் முதல்வர் எடப்பாடி. சமீபத்தில் பீலா ராஜேஷை அழைத்து, ‘நீங்க சுதந்திரமா செயல்படுங்க;’ என்று அறிவுரை கொடுத்தார். விஜயபாஸ்கர் ஓரங்கப்பட்ட பிறகு, பீலா ராஜேஷ் செய்தியாளர்களை சந்தித்த விதம் பல விமர்சனங்களை கிளப்பின. குறிப்பாக டெல்லி மாநாட்டுக்கு சென்ற தப்லீக் உறுப்பினர்கள் மீது பழிபோட்டது, பிறகு ஒன் சோர்ஸ் என்று அவர் பயன்படுத்திய வார்த்தைகள் என முதல்வருக்கு தகவல்கள் சென்றன. பீலா, ஆர்.எஸ்.எஸ். ஏஜென்ட் என்று குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இதற்கு வலுசேர்க்கும் விதமாக, ‘தமிழக அரசே! முதல்வர் பழனிசாமியே!! பாஜகவுக்கு நன்றி விசுவாசம் செய்யும் நேரமா இது, கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த சிறப்பாக பணியாற்றிய விஜயபாஸ்கர் தலைமையில் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தும் பொறுப்பை மீண்டும் வழங்கிடு. ஒட்டுமொத்த சுகாதாரத்துறையினரையும் ஆர்.எஸ்.எஸ், பாஜகவின் அஜென்டாவை களத்தில் அமல்படுத்தவைத்த, பாஜக பொன் ராதாகிருஷ்ணனின் உறவினரான சுகாதாரத்துறை செயலாளர் பீலாவை டிஸ்மிஸ் செய்! மதவாத அரசியலுக்குத் தலைசாய்க்காதே, மக்களைக் காத்திடு’என்ற துண்டுப் பிரசுங்கள் விஜயபாஸ்கரின் படத்தோடு சமூக தளங்களில் பரவ விடப்பட்டுள்ளன.
இந்த நிலையில்தான் நன்றாக பேசக் கூடிய தலைமைச் செயலாளர் சண்முகத்திடம், ‘முடிந்தால் நீங்களே பிரஸை மீட் பண்ணிடுங்களேன்’ என்று முதல்வர் கூற அதன்படியே நேற்று டி எம் எஸ் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் சண்முகம். இதற்கடுத்த கட்டமாக, ராதாகிருஷ்ணனையே கொண்டு வந்து அவரையே துறைச் செயலாளராக ஆக்கலாமா என்ற ஆலோசனை நடக்கிறது. இதுபோன்ற அசாதாரணமான சூழல்களை சந்திப்பதில் ராதாகிருஷ்ணன் மிகுந்த அனுபவம் கொண்டவர் என்பதால் அவரை தற்போதைய வருவாய் பேரிடர் ஆணையர் பதவியில் இருந்து மீண்டும் சுகாதாரத்துறை செயலாளராக ஆக்கினாலும் ஆச்சரியம் இல்லை” என்கிறார்கள்.