தந்தை – மகன் கொலை – சாத்தான்குளம் எஸ்.ஐ., ரகு கணேஷ் கைது!
சாத்தான்குளம் தந்தை – மகன் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தில் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக இருந்த ரகு கணேஷ் உள்ளிட்ட 6 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் ஜெயராஜ் – பென்னிக்ஸ் ஆகியோரை அற்ப காரணத்திற்காக காவல் நிலையத்திற்கு கூட்டிச் சென்று போலீசார் அடித்தே கொன்றதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் தேசிய அளவில் கொந்தளிப்பை ஏற்படுத்திய போதும் தமிழக அரசு சம்பந்தப்பட்ட காவலர்களை காப்பாற்றவே முனைந்தது. மாவட்ட எஸ்.பி அவர்களை உடனடியாக பணியிடை நீக்கம் செய்யாமல், பணியிட மாற்றம் மட்டுமே செய்தார்.
இவ்விவகாரம் தொடர்பாக விசாரிக்க சென்ற மாஜிஸ்திரேட் பாராதிதாசனிடம் தூத்துக்குடி ஏஎஸ்பி மற்றும் கோவில்பட்டி டிஎஸ்பி மிகவும் திமிராகவும், உடல் பலத்தை காட்டும் தோரணையுடனும் நடந்து கொண்டதாக அவரே குற்றம்சாட்டினார். ஐகோர்ட் மதுரை கிளை தலையீட்டால் இவ்வழக்கு தற்போது சரியான பாதைக்கு திரும்பியுள்ளது. சி.பி.சி.ஐ.டி போலீசாருக்கு வழக்கை மாற்றி ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. அவர்கள் இரண்டு நாட்கள் விசாரணை நடத்திய நிலையில், இன்று (ஜூலை 1) மாலை சாத்தான்குளத்தில் உதவி ஆய்வாளராக இருந்து, இருவர் மரணத்திற்கு காரணமான ரகு கணேஷ் என்பவரை கைது செய்துள்ளனர். மேலும் 6 காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர்.
சேவா பாரதி அமைப்புக்கும் பங்கு?
ஜெயராஜ் – பென்னிக்ஸை ‘பிரண்ட்ஸ் ஆப் போலீஸ்’ என்ற அமைப்பினரும், சேவா பாரதி என்ற அமைப்பினரும் இந்த சாத்தான்குளம் கொலைகார எஸ்.ஐ.,க்களுடன் சேர்த்துக்கொண்டு தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் மத, ஜாதிய வன்மம் இருப்பதற்கான முகாந்திரம் உள்ளதாக உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றனர். இந்த சேவா பாரதி அமைப்பானது காவல் துறையுடன் நெருக்கத்தை ஏற்படுத்தி கொண்டு கட்டப்பஞ்சாயத்துகளில் ஈடுபடுவதும் செய்திகளில் பதிவாகியுள்ளது.
கடந்த மாதம் நெல்லையில் வியாபாரிகளுக்கு கொரோனா விதிமுறைகள் அச்சிட்ட வாசகத்தை வழங்கிய இந்த அமைப்பு, மாநகர காவல்துறை என்று மட்டும் அச்சிடாமல், மாநகர காவல்துறை சேவா பாரதி, Friends of police திருநெல்வேலி நகரம் என போட்டு வெளியிட்டது. இது சமூக ஊடகங்களில் பரவி கடும் கண்டனத்தை பெற்றது. இதனையடுத்து நெல்லை காவல் துறை துணை ஆணையர் சரவணன், அது தங்கள் ஒப்புதலனின்றி அடிக்கப்பட்ட நோட்டீஸ், அதனை விநியோகிக்கக் கூடாது என உத்தரவிட்டார்.