”காசா பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தவில்லை” – இஸ்ரேல் ராணுவம் புளுகு
காசாவில் பொதுமக்கள் வசிக்கும் கட்டிடங்கள் மீது தாக்குதல் நடத்தவில்லை என்றும், ஹமாஸ் அமைப்பினர் உள்ள கட்டிடங்களை குறிவைத்தே தாக்குதல் நடத்தப்படுவதாகவும் இஸ்ரேல் ராணுவம் அப்பட்டமாக உண்மைக்கு புறம்பான செய்தியை கூறியுள்ளது.
இஸ்ரேல் மீது ஹமாஸ் போராளிகள் கடந்த சில தினங்களுக்கு முன் தாக்குதல் நடத்தியதை அடுத்து, இஸ்ரேல் பாலஸ்தீன் மக்கள் நெருங்கி வாழும் காசா மீதான தாக்குதலை உக்கிரப்படுத்தியுள்ளது. மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள், வழிபாட்டுத்தளங்கள், அகதி முகாம்கள் என்று அத்தனை இடங்களிலும் குண்டு போட்டு வருகின்றது. இதில் ஆயிரத்துக்கும் அதிகமான குழந்தைள், பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். “மிருகங்கள் மீதான போர்” என்று கூறி, போர் விதிகளை எதையும் மதிக்காமல் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது இஸ்ரேல்.
இந்த தாக்குதல் 5வது நாளை எட்டி உள்ள நிலையில், இதற்கு துருக்கி, ரஷ்யா, கத்தார் உள்ளிட்ட உலக நாடுகள் கடும் எதிர்ப்பும் கவலையும் தெரிவித்துள்ளன. இந்நிலையில், இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் ஜோனாதன் கான்ரிகஸ் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது: “ஹமாஸ் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த இஸ்ரேலியர்களின் எண்ணிக்கை 1,200 ஆக அதிகரித்துள்ளது. தொடக்கத்தில் 700 என்றும், 900 என்றும் இருந்தது. தற்போது இந்த எண்ணிக்கை 1,200 ஆக உயர்ந்துள்ளது. இது இறுதி எண் கிடையாது. ஏனெனில், இறந்தவர்கள் குறித்த விவரங்களை சேகரிக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலில் 2,700க்கும் அதிகமான இஸ்ரேலியர்கள் காயமடைந்துள்ளனர்.
காசாவைச் சேர்ந்தவர்கள் இஸ்ரேலின் பல்வேறு நகரங்களில் பணியாற்றுவார்கள். அவர்களிடம் இஸ்ரேலிய மக்கள் அன்பாக நடந்து கொள்வார்கள். ஹமாஸ் அமைப்பின் இந்த தாக்குதலால் காசா எல்லையைச் சுற்றி பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளோம். காசா எல்லையை சுற்றிலும் இஸ்ரேலிய படைகள் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஊடுருவல் நிகழாதவாறு தடுக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலின் பாதுகாப்புப் பணியில் மூன்று லட்சம் வீரர்கள் இணைந்துள்ளனர்.
இஸ்ரேல் நடத்தும் தாக்குதல் காரணமாக காசாவில் உள்ள பல்வேறு கட்டிடங்கள் நொருங்கி விழுவது குறித்த வீடியோக்களை நீங்கள் பார்க்க முடியும். அவை பொதுமக்கள் வசிக்கும் கட்டிடங்கள் அல்ல. குடியிருப்பு கட்டிடங்களை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் எடுத்து ஹமாஸ் அமைப்பினர் தங்களுக்கான இடமாகப் பயன்படுத்துவார்கள். அத்தகைய கட்டிடங்களைத்தான் இஸ்ரேல் ராணுவம் தாக்கி அழிக்கிறது. ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பும் தற்போது இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துகிறது. எனினும், இதுவரை இந்த தாக்குதலால் உயிரிழப்புகள் ஏதும் இல்லை.” இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ஆனால் எதார்த்தத்தில், 23 லட்சம் பாலஸ்தீனியர்கள் வசிக்கும் காசா பகுதிக்கு, மின்சாரம், எரிபொருள், உணவு சப்ளை ஆகிய அனைத்தையும் இஸ்ரேல் ராணுவம் தடை செய்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. காசா நகரை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1500ஐ தாண்யுள்ளதாகவும், 7000 பேர் காயமடைந்துள்ளதாகவும் பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும், இஸ்ரேல் தாக்குதலால் காயமடைந்தவர்கள் காசா மருத்துவமனைகளில் குவிந்துவருகின்றனர். குறைந்த எண்ணிக்கையிலேயே காசாவில் மருத்துவமனைகள் இருப்பதால், ஆயிரக்கணக்கானோர் சிகிச்சைக்காக காத்திருக்கின்றனர். மருத்துவ உதவி கிடைக்காமல் ஏராளமானோர் தவித்து வருகின்றனர். பாலஸ்தீனிய சுகாதார அமைச்சகம், உலக சுகாதார அமைப்பிடம் மனிதாபிமான உதவிகளை கோரியுள்ளது. இதற்கிடையே, போர் முடியும் வரை இஸ்ரேலிடம் இருந்து பிடித்து செல்லப்பட்ட பணயக் கைதிகள் பற்றி பேச்சுவார்த்தை நடத்த மாட்டோம் என்று ஹமாஸ் அமைப்பு குழு அறிவித்துள்ளது.