‘தடுப்பூசி பற்றி கிரேட் நியூஸ்’ சொன்ன அதிபர் டொனால்டு டிரம்ப்!
கொரோனா தடுப்பூசி கண்டறிவதில் உலக ஆராய்ச்சியாளர்கள் போராடி வரும் நிலையில், ‛தடுப்பூசிகள் பற்றிய கிரேட் நியூஸ்’ என அமெரிக்க அதிபர் டிரம்ப் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.இது, கொரோனா தடுப்பூசிக்கான ஆய்வில் பெரிய முன்னேற்றம் அடைந்திருப்பதையே குறிப்பதாக கருதப்படுகிறது.
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி வருகிறது. உயிரிழப்பு பெரியளவில் இல்லாவிட்டாலும், சுதந்திரமான நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் ஊரடங்கால், பொதுமக்கள் பெரும் அவதியுற்று வருகின்றனர். பொருளாதார இழப்புகளும் கடுமையாகியுள்ளன. இதற்கு, தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதே உலக மக்களின் ஆவலாக உள்ளது.
இதற்கிடையே, அமெரிக்காவில் கொரோனா தடுப்பு மருந்தை மனிதர்களுக்கு செலுத்தி நடத்தப்பட்ட சோதனை வெற்றி பெற்றுள்ளதாக பயோ தொழில்நுட்ப நிறுவனமான மாடர்னா தெரிவித்தது. மேலும், ஜூலை 27ம் தேதி மிகப்பெரிய அளவில் மூன்றாம்கட்ட சோதனையை துவங்க இருப்பதாக அறிவித்துள்ளது. அமெரிக்கா முழுவதும் சுமார் 87 இடங்களில் 30 ஆயிரம் பேருக்கு தடுப்பு மருந்தை செலுத்த அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப், ‛தடுப்பூசிகள் பற்றிய கிரேட் நியூஸ்’ என தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். டிரம்பின் இந்த டிவிட், தடுப்பூசி கண்டுபிடிப்பில் முன்னேற்றம் கிடைத்திருப்பதையே உணர்த்துவதாக தெரிகிறது. எவ்வாறாயினும், அதற்கான விடையை செய்தியாளர்கள் சந்திப்பில் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.