‘ஃபிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ்’குழுவுக்கு தடை
விழுப்புரம் மாவட்ட காவல் நிலையத்திற்கு, இனி ‘ஃபிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ்’ வர தடை விதிப்பதாக மாவட்ட எஸ்.பி உத்தரவிட்டுள்ளார்.
காவல்துறைக்கு உதவி செய்வதாக கூறிக்கொண்டு, இயங்கிவரும் வரும் அமைப்பு ‘ஃபிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ்’ (Friends of Police)குழு. இதில், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் உறுப்பினர்களே அதிகமாக உள்ளனர். இவர்கள், தங்களை காவல் துறை அதிகாரிகள் போல காட்டிக்கொண்டு, அப்பாவி மக்களை அடித்து மிரட்டி பணம் பறிப்பதாக பல இடங்களில் குற்றசாட்டு கிளம்பியது.
குறிப்பாக, சாத்தான்குளம் தந்தை-மகன் உயிரிழப்பில், ‘ஃபிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ்’ முக்கிய பங்கு வகித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. சட்டத்தை கையில் எடுக்க இந்த சட்டவிரோத அமைப்பினருக்கு யார் அதிகாரம் கொடுத்தது என்ற கேள்வி தமிழகம் முழுவதும் எழுந்துள்ளது. இவர்களை தடை செய்ய பல அரசியல் தலைவர்களும், வியாபாரிகளும், பொதுமக்களும் குரல் கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், ஃபிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் குழுவுக்கு தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்ட காவல் நிலையத்திற்கு, இனி ‘ஃபிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ்’ வர தடை விதிப்பதாக மாவட்ட எஸ்.பி உத்தரவிட்டுள்ளார்.
இந்த உத்தரவை மீறி போலீஸ் நண்பர்கள் குழுவினர் காவல்நிலையத்திற்கு அனுமதித்தால், சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கடுமையாக எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
ஏற்கனவே, திருச்சி, கரூர், புதுக்கோட்டை, பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் ஃபிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் தடை செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரண்ட்ஸ் ஆப் போலீஸ், காவல் பணியில் ஈடுபட தடை விதிக்கப்படுவதாக திருச்சி சரக டி.ஐ.ஜி ஆனி விஜயா தகவல் தெரிவித்துள்ளார்.