பாலஸ்தீனியர்களுக்கு எதிராக வதந்திகளை பரப்புவதில் டிவிட்டர் முன்னணி: திடுக் ஆய்வு
கடந்த சில தினங்களுக்கு முன் இஸ்ரேல் இராணுவத்தினர் மீது பாலஸ்தீன போராளி குழுவான ஹமாஸ் வீரர்கள் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து, பாலஸ்தீனின் காசா பகுதி மீது கடுமையான தாக்குதலை இஸ்ரேல் உக்கிரப்படுத்தியுள்ளது. இதில் பல அப்பாவி பாலஸ்தீனிய பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், இஸ்ரேலின் போர் அநியாயங்களை நியாயப்படுத்தவும், ஹமாஸ் இயக்கத்தினர் மீது வெறுப்பை ஏற்படுத்தும் வகையிலும், டிவிட்டரில் ஆயிரக்கணக்கான போலி வீடியோக்கள் ஷேர் செய்யப்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த வீடியோக்களை உண்மை என்று நம்பி, லட்சக்கணக்கானோர் பார்வையிட்டும், பகிர்ந்தும் வருகின்றனர். குறிப்பாக, மிக நம்பகமாக கருதப்படும் டிவிட்டரில் தளத்திலேயே இத்தகைய போலி வீடியோக்கள் பகிரப்படுவதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
சமீபத்தில் டிவிட்டர் செய்தி நிறுவனத்தை, அமெரிக்காவின் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் என்பவர் விலைக்கு வாங்கினார். அவருடைய நெருங்கிய நண்பரான இயன் மைல்ஸ் சியோங் என்பவர், சில தினங்களுக்கு முன், டிவிட்டரில், பாலஸ்தீனிய போராளிகள் இஸ்ரேலிய பொதுமக்களை கொலை செய்வது போன்ற வீடியோ ஒன்றை, ஷேர் செய்துள்ளார். மேலும், அதில் “இந்த அநியாயம் உங்கள் குடும்பத்திற்கு நடந்தால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள்.” என்று தெரிவித்துள்ளார்.
ஆனால், அதில் கொல்லப்படுவது இஸ்ரேலியர்கள் அல்ல, பாலஸ்தீனியர்கள் என்றும், அந்த வீடியோ இஸ்ரேலிய ராணுவம் பாலஸ்தீனியர்களை கொலை செய்யும் வீடியோ என்றும் தெரியவந்துள்ளது. எனினும், அந்த போலி வெறுப்பு வீடியோ இன்னும் நீக்கப்படாமல் இருப்பதுடன், அதை உண்மை என்று நம்பி லட்சக்கணக்கானோர் பகிர்ந்துள்ளனர். இந்த போலி வீடியோக்களுக்கு டிவிட்டரும் துணை நிற்கின்றதா என்று சந்தேகம் எழுந்துளள்து.
குறிப்பாக, டிவிட்டரை சமீபத்தில் விலைக்கு வாங்கிய எலான் மஸ்க், பல ஆயிரக்கணக்கான ஊழியர்களை வேலையை விட்டு நீக்கினார். மேலும், பணம் செலுத்தினால், “சரிபார்க்கப்பட்ட அக்கவுன்டுகள்” என்பதற்கான நீல நிற டிக் மார்க் அங்கீகாரத்தை வழங்குவதாக அறிவித்தார். இதுவே தற்போது பிரச்னையாக மாறியுள்ளது.
தகவல்களை சரிபார்க்கவும், போலியான செய்திகளை நீக்கவும், போதிய ஊழியர்கள் இல்லாமல், டிவிட்டர் செயல்பட்டு வருகின்றது. மேலும், பணம் செலுத்தினால், நம்பகத்தன்மைக்கான நீல நிற டிக் மார்க் குறியீடு இலகுவாக கிடைத்துவிடுகின்றது என்பதால், வதந்தி பரப்புவோர் அதை வாங்கி வைத்துக்கொண்டு, அதில் போலி வீடியோக்களை பகிர்ந்து வருகின்றனர். இதன் மூலம் இஸ்ரேலுக்கு ஆதரவு கருத்துகளை திரட்டி வருகின்றனர்.
இது போன்றே, பேஸ்புக், யூடியூப், இன்ஸ்டாகிராம், டிக்டாக் ஆகிய தளங்களிலும், பாலஸ்தீனியர்கள் மீது வெறுப்பை வரவழைக்கும், ஏராளமான போலி வீடியோக்களை பகிர்ந்து வருவதாக தெரியவந்துள்ளது. இஸ்ரேலிய உளவு நிறுவனங்களே, இவ்வாறான பல போலி வீடியோக்களின் பின்னணியில் இருப்பதாக கூறப்படுகிறது.
“இந்தியாவில், கலவர நேரங்களில், பா.ஜ. கட்சியினர், எப்படி மிக நுணுக்கமாக வதந்திகளை பரப்புகின்றனரோ, அதே போன்று தான், தற்போது பாலஸ்தீன மக்களுக்கு எதிரான போலி செய்திகளை யூதர்களும் பரப்புகின்றனர்” என்று சமூக வலைத்தள ஆய்வாளரான ஜெயரஞ்சிதா குற்றஞ்சாட்டி உள்ளார். எனவே, பொதுமக்கள் மிக கவனமாக செய்திகளை ஆய்வு செய்த பின்னரே நம்ப வேண்டும் என்றும், வீடியோக்களை பகிர்வதற்கு முன்னால், ஒன்றுக்கு இரண்டு முறை சரிபார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.