மேற்கு வங்கத்தில் தீவிரம் காட்டிய பாஜகவை வீழ்த்திய மம்தா: பின்னணியில் இடம்பெற்ற முக்கிய அம்சங்கள் என்ன?

மேற்கு வங்க மாநிலத்தின் எட்டு கட்ட தேர்தல் துவங்குவதற்கு வெகுநாட்களுக்கு முன்பாகவே பாஜக தீவிர முனைப்பு காட்டி வந்தது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேரடியாக கவனம் செலுத்தினார். பிரதமர் மோடி இங்கு அதிகமான பிரச்சாரக் கூட்டங்களில் கலந்து கொண்டார்.

அவரது கட்சியின் மத்திய அமைச்சர்கள், முக்கியத் தலைவர்கள் பிரச்சாரம் செய்தனர்.

இதனால், மீண்டும் மம்தாவுக்கு முதல்வராகும் வாய்ப்பு கேள்வி குறியானது. ஆனால்,திரிணமூல் கட்சியின் தனித் தலைவராகவும், பெண்ணாகவும் நின்று சமாளித் திருக்கிறார் மம்தா. இதன் பின்னணியில் பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. பாஜகவின் அளவுக்கு அதிகமான கடும் விமர்சனங்களால், மம்தா மீது பரிதாபம் கிளம்பியது. மம்தாவின் காலில் ஏற்பட்ட எலும்பு முறிவை கட்டு போட்டுக் கொண்டு, சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி முதல்வர் மம்தா செய்த பிரச்சாரத்தால் அவருக்கு செல்வாக்கு அதிகரித்தது.

இது பெண் வாக்காளர்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இதை மேலும் அதிகரிக்க மம்தா, பாஜகவை விட அதிகமாக ஐம்பது பெண் வேட்பாளர்களுக்கு வாய்ப்பளித்தார்.
தனது கட்சியை, மண்ணின் மைந்தர்கள் கட்சி எனவும், பாஜக வெளிமாநிலத்தை சேர்ந்ததாகவும் அவர் செய்த பிரச்சாரத்திற்கு பெரும் ஆதரவு கிடைத்தது. குறிப்பாக, ‘மேற்கு வங்கத்திற்கு அதன் மகளது ஆட்சியே தேவை’ எனும் கோஷத்தை மம்தா முன் வைத்தார். இது, மேற்கு வங்கத்தில் அதிகரித்துவரும் இந்தி பேசும் மக்கள் மற்றும் பெங்காலிகளுக்கு இடையிலான போட்டியாகவும் உருவெடுத்தது.

இந்த விவகாரத்தில், பாஜக தன் முதல்வர் வேட்பாளராக எவரையும் முன்னிறுத்தாததும் மம்தாவிற்கு சாதகமானது. தனது துவக்கம் முதல் அனைத்து இடங்களிலும் இந்துக்களை ஒருங்கிணைக்கச் செய்து வரும் நடவடிக்கையை பாஜக இங்கும் தொடர்ந்தது. இந்துக்கள் எனும் பெயரில் மேற்கு வங்கத்தின் தலித், ஆதிவாசி மற்றும் பிற்படுத்தப்பட்டவர்களை ஒன்றிணைக்கவும் பாஜக முயன்றது. தேர்தலுக்கு இடையே இதன் எல்லையிலுள்ள வங்கதேசத்துக்கு சென்ற பிரதமர் மோடி, அங்கு மத்துவா சமூகத்தின் கோயிலுக்கும் சென்றிருந்தார்.

இதன்மூலம், மேற்கு வங்க மாநிலத்திலும் அதிகம் இருந்த மத்துவா சமூகத்தினரை முழுவதுமாக பாஜகவால் கவர முடியாமல் போய் விட்டது.

இதுபோன்ற இந்துத்துவா பிரச்சாரம் மேற்கு வங்க மாநிலத்தில் முப்பதிற்கும் மேற் பட்ட சதவிகிதத்தில் உள்ள முஸ்லிம்களிடம் அச்சத்தை ஏற்படுத்திவிட்டது. இதனால், முஸ்லிம்களும் அதிக வாக்குகளை மம்தாவுக்கு அளித்தது வெற்றிக்கு காரணமாக அமைந்தது.

இதில், மம்தாவின் வாக்குகளை பிரிக்க புதிதாக உருவான இந்திய மதச்சார்பற்ற முன்னணி (ஐஎஸ்எப்) எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. மேற்கு வங்கத்தில் காங்கிரஸுக்கு பின் சுமார் 34 வருடங்கள் ஆட்சி புரிந்தாலும் இடதுசாரிகளை அதன் வாக்காளர்கள் பொருட்டாக எண்ணவில்லை. இதன் தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸும், ஐஎஸ்எப் கட்சிகள் இணைந்தும் பலனில்லாமல் போனது.

guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
1
0
Would love your thoughts, please comment.x
()
x