நந்திகிராம் தொகுதியில் தோற்றாலும் முதல்வராக மம்தா பானர்ஜிக்கு தடையில்லை
மேற்கு வங்க தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் மீண்டும் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது.
இக்கட்சியின் தலைவரும், முதல்வருமான மம்தா பானர்ஜி, நந்திகிராம் தொகுதியில் தோல்வி அடைந்துள்ளார். ஒருகாலத்தில் அவரது நம்பிக்கைக்கு உரிய தலைவராக இருந்த சுவேந்து அதிகாரி, பாஜக சார்பில் போட்டியிட்டு தற்போது மம்தாவை தோற்கடித்துள்ளார். நந்திகிராமில் அடைந்த தோல்வியால், மம்தா மூன்றாவது முறையாக மீண்டும் முதல்வராக அமர முடியுமா என கேள்வி எழுந்துள்ளது.
இது குறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் முன்னாள் கூடுதல் அட்டர்னி ஜெனரல் கே.விஸ்வ நாதன் கூறும்போது, ‘தேர்தலில் வெற்றிபெற முடியாவிட்டாலும் எந்த ஒரு வேட்பாளரும் முதல்வராகும் வாய்ப்பை இழந்து விடக்கூடாது என்பதற்காகவே 164-வது விதி உள்ளது. ஊழல் அல்லது கிரிமினல் வழக்குகளில் 2 வருடங்களுக்கு தண்டனை பெற்றால் மட்டுமே முதல்வராக முடியாது. முதல்வரான ஆறு மாதங்களில் மம்தா வேறு ஏதாவது தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற வேண்டும்’ என்றார்.
நந்திகிராமில் தோல்வியடைந்த மம்தாவின் வாக்கு வித்தியாசம் 1,946 மட்டுமே. இதனால் நந்தி கிராமில் மறு வாக்கு எண்ணிக்கை நடத்த தேர்தல் ஆணையத்தை மம்தா வலியுறுத்தி உள்ளார். இதற்கிடையில் நாளை அவர் 3-வது முறை முதல்வராக பதவி ஏற்க திட்டமிட்டுள்ளார். இதுபோல், தேர்தல்களில் போட்டியிடாமல் முதல்வராகவும், பிரதமராகவும் பதவி ஏற்கும் வழக்கம் புதியதல்ல. இரண்டு முறை பிரதமர் பதவி வகித்த டாக்டர் மன்மோகன் சிங்கும் மக்களவை தேர்தலில் போட்டியிட்டது கிடையாது. இவர்,மாநிலங்களவையின் உறுப்பினராகவே இருந்துள்ளார். பிஹாரில் தொடர்ந்து 15 ஆண்டு களாகப் பதவி வகிக்கும் முதல்வர் நிதிஷ்குமார், சட்டப்பேரவைக்கு போட்டியிட்டது இல்லை. மகாராஷ்டிராவின் முதல்வர் உத்தவ் தாக்கரேவும் தேர்தல் போட்டியிடாத முதல்வரே.
இந்த இருவருமே தங்களது மாநிலங்களின் மேலவையின் உறுப்பினராகத் தேர்வு செய்யப் பட்டுள்ளனர். இந்த மேல்சபை மேற்கு வங்க மாநிலத்தில் கிடையாது.
இருப்பினும், வேட் பாளர்கள் இறப்பு காரணமாக ஜான்கிபூர் மற்றும் ஷம்ஷேர்கன்ச் ஆகிய தொகுதிகளின் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதன் ஒன்றில், மம்தா போட்டியிடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.