8 ஆயிரத்துக்கு சாப்பிட்டால், 4 ஆயிரம் ரூபாய் தான் பில்… எங்கு தெரியுமா?
நம் இந்தியா போன்ற ஒருசில நாடுகளை தவிர, உலகின் மற்ற நாடுகளின் அரசுகள், சிறுகுறு தொழில்களை காப்பாற்ற தங்களால் ஆன அனைத்து முயற்சிகளையும் செய்து வருகின்றன. அந்த வகையில், இங்கிலாந்து மேற்கொண்டுள்ள முயற்சி அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது.
இங்கிலாந்தில், ஆகஸ்டு மாதத்தில், உணவகங்களுக்கு சென்று சாப்பிட்டால், 50 சதவீத டிஸ்கவுன்ட் என்று அதிரடியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகை சிறுவர்கள் உட்பட அனைத்து தரப்பினருக்கும் பொருந்தும். உதாரணமாக, நான்கு பேர் கொண்ட ஒரு குடும்பம் ஒன்று 8 ஆயிரம் ரூபாய்க்கு சாப்பிட்டால், அதில் 4 ஆயிரம் ரூபாயை அரசே பொறுப்பேற்று கொள்ளும்.
தள்ளுபடியாக வழங்கும் தொகையானது, ஒவ்வொரு உணவகங்களின் வங்கிக் கணக்கில் 5 நாட்களுக்குள் அரசே செலுத்தும் எனவும் அறிவித்துள்ளது. உணவகங்களை நம்பியுள்ள 18 லட்சம் பேரின் வேலையை உறுதி செய்யும் நோக்கத்தின் அடிப்படையில் இந்த திட்டத்தை உருவாக்கியுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.
கொரோனா காலத்தில் மக்கள் ஹோட்டல்களுக்கு செல்ல தயக்கம் காட்டி வருவதால், அதை போக்கும் விதமாக இந்த திட்டம் உதவும் என்று கருதப்படுகிறது. மேலும் விருந்தோம்பல் மற்றும் தங்குமிடங்களுக்கான மதிப்பு கூட்டு வரிகளை 20 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் உணவகங்கள், கஃபே போன்றைவை சரிவில் இருந்து மீண்டு வரும் என்று நம்பப்படுகிறது.
ஏற்கனவே, இங்கிலாந்து மற்றும் வடக்கு அயர்லாந்தில் 5 கோடி ரூபாய் வரையான சொத்துக்களுக்குரிய முத்திரை வரியை அடுத்த வருடம் மார்ச் 31 வரை ரத்து செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.