முதல் கொரோனா தடுப்பூசி; சாதித்தவர் தமிழர்..!!!
இந்தியாவின் முதல் கொரோனா தடுப்பூசியான ‘கோவாக்சின்’ தடுப்பு மருந்தை கண்டுபிடித்துள்ளது ‘பாரத் பயோடெக்’ நிறுவனம். இதனை நிறுவிய கிருஷ்ணா எல்லா, திருத்தணியைச் சேர்ந்த தமிழர் ஆவார் .
தெலுங்கானா மாநிலம் ஐதராபாதைச் சேர்ந்த, ‘பாரத் பயோடெக்’ நிறுவனம், ஐ.சி.எம்.ஆர்., எனப்படும் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் மற்றும் தேசிய வைராலஜி மையம் ஆகியவை இணைந்து, இந்தியாவின் முதல் கொரோனா தடுப்பூசியான, ‘கோவாக்சின்’ தடுப்பூசி மருந்தை தயாரித்துள்ளன.
இதை மனிதர்களுக்கு செலுத்தி சோதனை செய்வதற்கு, டி.சி.ஜி.ஐ., எனப்படும் இந்திய மருந்து கட்டுப்பாட்டு கழகம் அனுமதி அளித்துள்ளது. ஆக., 15ல் நாட்டின் சுதந்திர தினத்தன்று, இந்த தடுப்பூசியை அறிமுகம் செய்யப்பட உள்ளது என, ஐ.சி.எம்.ஆர்., கூறியுள்ளது.
‘பாரத் பயோடெக்’ நிறுவனத்தை நிறுவிய கிருஷ்ணா எல்லா, திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள திருத்தணி அருகே நெமிலி என்ற கிராமத்தில் விவசாய குடும்பத்தில் பிறந்தவர் . பட்டப்படிப்பை முடித்ததும் ‘பேயர்’ என்ற மருந்து கம்பெனியில் பணியில் சேர்ந்த இவர், ‘பிரீடம் பிரம் ஹங்கர்’ எனும் உதவித்தொகை கிடைக்க, அமெரிக்கா சென்று உயர் கல்வி பயின்றார்.
ஹவாய் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டமும், விஸ்கான்சின் – மேடிசன் பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டமும் முடித்தார். வெளிநாட்டில் தங்க விரும்பிய இவர், தாயின் வற்புறுத்தலின் பேரில் இந்தியா வந்து, மருந்து நிறுவனத்தை துவங்கியுனார்.
ஐதராபாத்தில் 1996ல் சிறிய பரிசோதனை கூடத்தை நிறுவியவர், பொதுச் சுகாதாரத் துறையின் பாதுகாப்பில் பங்கு வகிக்க விரும்பினார். மலிவு விலையில் ஹெபடைடிஸ் மருந்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கினார்.
மற்ற நிறுவனங்கள் அந்த மருந்துக்கு 40 டாலர் என விலை நிர்ணயிக்க, வெறும் ஒரு டாலருக்கு மருந்து கிடைக்கும் என அறிவித்தார். நிதியுதவி கிடைக்காத போதும், வங்கி கடனாக ரூ.2 கோடி பெற்று மருந்து தயாரிப்பில் அவரது நிறுவனம் ஈடுபட்டது.
1999ல் அப்போதைய ஜனாதிபதி அப்துல் கலாம், இவரது மலிவு விலை ஹெபடைடிஸ் மருந்தை வெளியிட்டார். இவரது பாரத் பயோடெக் நிறுவனம் தான், உலக அளவில் ஸிகா வைரசுக்கு முதன்முதலாக தடுப்பு மருந்து கண்டுபிடித்தது.
1996ல் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, உயிரியல் தொழில்நுட்பப் பூங்கா அமைக்க அனுமதி அளித்து, இவருக்கு நிலம் அளித்தார்.தனது ஹெபடைடிஸ் மருந்து உற்பத்தி ஆலையை இங்கு அமைத்தார் எல்லா.
அங்கு தற்போது 100க்கும் மேற்பட்ட மருந்து உற்பத்தி ஆலைகள் இயங்கி வருகின்றன. இதனை தொடர்ந்து பெங்களூரு, பூனேயில் மேலும் இரு உயிரியல் தொழில்நுட்ப பூங்காக்களை தொடங்கி உள்ளார்.
இத்தகவல்களை, 2011ல் ‘ரெடிப்’ இதழுக்கு அளித்த பேட்டியில் இதனை அவர் தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணா எல்லாவின் சாதனைகளை அங்கீகரித்து 100க்கும் மேற்பட்ட தேசிய, சர்வதேச விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
உலகில் பேரழிவை ஏற்படுத்தி வரும் கொரோனாவுக்கும், ‘கோவாக்சின்’ எனும் தடுப்பூசி கண்டுபிடித்து, இந்தியாவின் முதல் கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்த நிறுவனம் எனும் சாதனையை படைத்துள்ளது அவரது நிறுவனம்..