அரபு நாடுகளுடனான இயல்பான உறவு மற்றும் அரசியல் திட்டம் குறித்து, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஐ.நா. சபையில் உரையாற்றிய சில தினங்களிலேயே, இஸ்ரேலுக்கு அரசியல் ரீதியாகவும் ராஜதந்திர ரீதியாகவும் ஒரு மரண அடியை கொடுத்திருக்கிறது பாலஸ்தீனிய விடுதலை அமைப்பான ஹமாஸ். உச்சபட்ச வலிமையுடன் திகழும் அடக்குமுறை அரசின் மீதான, ஏதுமற்ற எளிய மக்களின் புறத்திலிருந்து நிகழ்த்தப்பட்டுள்ள இந்த தாக்குதலால், ஒட்டுமொத்த இஸ்ரேல் அதிர்ச்சியிலும் , பாலஸ்தீன் ஆராவாரத்திலும் உள்ளது.
கடந்த சனிக்கிழமை (07/10/2023), பாலஸ்தீன ஆக்கிரமிப்பு எதிர்ப்பு இயக்கமான ஹமாஸ், காஸாவிலிருந்து இஸ்ரேலுக்குள் வான், கடல் மற்றும் நிலம் வழியாக மிகத் துல்லியமாக திட்டமிட்டு, நன்கு செயல்படுத்தப்பட்ட மின்னல்வேக தாக்குதலை வெற்றிகரமாக நடத்தியுள்ளது. இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு பகுதிகளை நோக்கி ஆயிரக்கணக்கான ஏவுகணைகள் ஏவப்பட்டன. அத்துடன் இஸ்ரேலிய இராணுவம் மற்றும் நாட்டின் தெற்குப் பகுதிகளை, நூற்றுக்கணக்கான பாலஸ்தீனிய போராளிகள் தாக்கினர். இதில் 600க்கும் அதிகமான இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். பல இஸ்ரேலிய வீரர்கள் மற்றும் பொதுமக்கள் பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்டனர்.
ஹமாஸின் இந்த தாக்குதல் நோக்கங்கள் இரகசியமானவை அல்ல: இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு, அடக்குமுறை, சட்டவிரோத குடியேற்றம் மற்றும் பாலஸ்தீனிய மதச் சின்னங்களை, குறிப்பாக ஜெருசலேமில் உள்ள அல்-அக்ஸா மசூதியை இழிவுபடுத்தியதற்காக பதிலடி கொடுத்து தண்டிப்பதே முதன்மை நோக்கம். இரண்டாவதாக, இஸ்ரேலின் இனவெறி ஆட்சியை ஆரத்தழுவி அதை இயல்பாக்கும் நடவடிக்கைகளுக்கு இசைந்து கொடுக்கும் சவூதி உள்ளிட்ட அண்டை அரபு தேசங்களுக்கு எச்சரிக்கை செய்தி கொடுப்பது. கடைசியாக, இஸ்ரேலிய சிறைகளில் இருக்கும் பல பாலஸ்தீன அரசியல் கைதிகளை விடுவிக்கும் வகையிலான பணயக்கைதி பரிமாற்றம்.
இருபது வருடங்களுக்கு மேலாக இஸ்ரேலிய சிறையில் வாடிய ஹமாஸின் தலைவர் யாஹ்யா அல் சின்வார் இப்படியான கைதிகள் பரிமாற்றத்திலேயே விடுவிக்கப்பட்டார். மற்ற பாலஸ்தீனியர்களைப் போலவே, இஸ்ரேலிய வன்முறையில் தனது மனைவி, மூன்று வயது மகள் மற்றும் ஒரு கைக்குழந்தையை, ஹமாஸ் இராணுவப் பிரிவின் தலைவரான முகமது டெய்ஃப், பறிகொடுத்துள்ளார். அதற்கு பழிவாங்கும் அம்சமும் இதில் தெளிவாக உள்ளது. இஸ்ரேலுக்கு, இந்த தாக்குதல் நம்பமுடியாத அதிர்ச்சியாக இருந்திருக்கலாம்; ஆனால் வரலாற்று ரீதியாக அது ஆச்சரியமானது இல்லை.
இஸ்ரேல் டெக்னானலஜியான ஹுப்ரிஸ் ஐயன் டோம், எதிரிகளின் எப்பேர்பட்ட ராக்கெட் தாக்குதலையும் அனாயசமாக எதிர்கொள்ளும் என்று பெருமையடித்த இஸ்ரேலின் திமிர்பிடித்த தலைவர்கள், தற்போது தலைகுனிந்து நிற்கின்றனர். தங்களை யாரும் வெல்ல முடியாது என்று இறுமாப்புடன் எதிரிகளை தொடர்ந்து குறைத்து மதிப்பிட்டனர். எனினும், 1973 அக்டோபர்-இல் தொடுக்கப்பட்ட அதிரடி அரபுத் தாக்குதலுக்குப் பிறகு, ஒடுக்கப்பட்ட மக்கள் தங்களால் என்ன செய்ய முடியும் என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்து, அடுத்தடுத்து வந்த இஸ்ரேலியத் தலைவர்களுக்கு, அதிர்ச்சியை கொடுத்து வருகின்றனர்.
1982 இல் லெபனான் மீதான இஸ்ரேலிய படையெடுப்பை அடுத்து, லெபனான் ஆற்றிய எதிர்வினை, 1980 கள் மற்றும் 2000 களில் பாலஸ்தீனிய இன்டிஃபாடா எழுச்சி, ஐம்பது வருடங்களுக்கும் மேலான இஸ்ரேலிய ஆக்கிரமிப்புக்கு எதிரான போர்கள் ஆகியன எதுவுமே இஸ்ரேலிய தலைவர்கள் எதிர்பார்க்காமல் நடந்தவைதான். குறிப்பாக, ஹமாஸின் இந்த அதிரடியான ஆபரேஷன் அல்-அக்சா ஃபிளட் தாக்குதலை, இஸ்ரேலிய இராணுவம் மற்றும் சிவில் தலைமையும் கூட எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ஹமாசின் இந்த வெற்றி, இஸ்ரேலிய உளவுத்துறை மற்றும் இராணுவ தோல்வியை அப்பட்டமாக பிரதிபலிக்கிறது. எங்கும் பரவிய ஒற்றர்கள், ஆளில்லா விமானங்கள் மற்றும் கண்காணிப்புத் தொழில்நுட்பம் கொண்ட இஸ்ரேலின் அதிநவீன நெட்வொர்க் இருந்தபோதிலும், ஹமாசின் தாக்குதலைக் கண்டறிந்து முன்கூட்டியே தடுக்க முடியவில்லை.
ஆனால் இஸ்ரேலுக்கு ஏற்பட்ட சேதம் உளவுத்துறை மற்றும் இராணுவ தோல்விக்கு அப்பாற்பட்டது; இது இஸ்ரேலுக்கு ஒரு அரசியல் மற்றும் உளவியல் பேரழிவு ஆகும். வெல்ல முடியாத அரசு என்று மார்தட்டிக்கொண்ட இஸ்ரேலுக்கு, இத்தாக்குதல் அதன் பலவீனத்தையும் பயங்கரமான இயலாமையாகவும் காட்டியுள்ளது. பாலஸ்தீனியத்தை ஒட்டுமொத்தமாக புறக்கணித்துவிட்டு, மத்திய கிழக்கு பகுதிக்கு தன்னை புதிய தலைமையாக ஆக்கிக்கொள்வதற்கான அதன் திட்டங்களுக்கு பேரிடியாய் அமைந்துள்ளது.
இஸ்ரேலியர்கள் பயத்தில் தங்கள் வீடுகளையும் நகரங்களையும் விட்டு வெளியேறும் காட்சிகள், இன்னும் பல ஆண்டுகளுக்கு அவர்களின் கூட்டு நினைவில் நிலைத்திருக்கும். தாக்குதல் நடத்தப்பட்ட அந்த நாள், இஸ்ரேலின் வரலாற்றில் மிக மோசமான நாள். ஒரு முழு அவமானத்தை தேடிந்தந்த நாள்.
அசைக்க முடியாதவராக, ஆறாவது முறையாக அதிகார சிம்மாசனத்தில் வீற்றிருக்கும், ஆராவார பரப்புரையாளர் நெதன்யாகு, இனி எப்படி வாய்வார்த்தைகளை சுழற்றி ஜாலம் காண்பித்தாலும், அந்த அவமானத்தை துடைக்கவோ மாற்றவோ முடியாது. சனிக்கிழமை காலை உலகம் கண்டதை மறக்க செய்ய, இஸ்ரேலுக்கு இனி ஒரு வாய்ப்பு கிடைக்காது: வெறித்தனமான இஸ்ரேலின் வீண் மாயைகளில், இடி இறங்கியுள்ளது.
கடந்த காலத்தில் நடந்தது போல், பெரும் இராணுவ தாக்குதலை மேற்கொண்டு, தனது இழந்த செல்வாக்கை மீட்க இஸ்ரேல் முயற்சிக்கும். பாலஸ்தீனியர்களுக்கு பெரும் சேதங்களையும் எண்ணற்ற உயிரிழப்புகளையும் ஏற்படுத்தக்கூடிய குண்டுவீச்சுகளை இஸ்ரேல் மேற்கொள்ளும். மேலும் படுகொலை பிரச்சாரங்களை நிகழ்த்தும். கடந்த காலங்களைப் போலவே, இது மீண்டும் மீண்டும் எத்தனை முறை நிகழ்ந்தாலும், பாலஸ்தீனியர்களின் விடுதலை உணர்வை அவற்றால் எதுவும் செய்து விட முடியாது.
அதனால் மற்றொரு வழியில், ஹமாஸ் மற்றும் பிற பாலஸ்தீனிய இயக்களை முடிவுக்குக் கொண்டுவரப்போகிறோம் என்று சொல்லி, கீழை காசா பகுதி மற்றும் மேற்குக் கரையில் உள்ள பாலஸ்தீனிய நகரங்களில் தனது இராணுவத்தை இஸ்ரேல் மீண்டும் நிறுத்தக்கூடும். முழு பாலஸ்தீனிய அதிகாரத்தை அழித்து, பாலஸ்தீனிய நிலத்தை முழுமையாக செரிக்க நினைக்கும் “அகண்ட இஸ்ரேல்” கோட்பாட்டாளர்கள் மற்றும் இஸ்ரேலின் ஆளும் கூட்டணியின் ஆசையும் அதுவே. ஆனால், அப்படி செய்தால் அது ஒரு பெரிய தவறாக இஸ்ரேலுக்கு அமையும். உலகரங்கில், முன் எப்போதும் இல்லாத வகையில் இஸ்ரேல் தனிமைப்படும். இதுவரை நெதன்யாகுவை ஆதரித்த மேற்கத்திய தலைவர்கள் கூட, இஸ்ரேலிய அரசாங்கத்திலிருந்து தங்களைத் தூர விலக்கிக் கொள்ளத் தொடங்கலாம்.
ஏற்கனவே, இஸ்ரேலுக்கு அவமானத்திலும் அவமானத்தை பெற்றுத் தந்த இந்த தாக்குதல், இஸ்ரேலை ராஜதந்திர மற்றும் ஆட்சி ரீதியாக ஏளனப் பார்வைக்கு உட்படுத்தியுள்ளது. மத்திய கிழக்கின் ராஜாவாக காட்டிக்கொள்ளும் இஸ்ரேலின் முயற்சிக்கு இது மிகப்பெரும் சறுக்கல். அசைக்க முடியாது என்று கருதப்பட்ட இஸ்ரேலுடனான உறவுகளை இயல்பாக்கிக் கொண்ட அரபு ஆட்சியாளர்கள், இப்போது முட்டாள்களைப் போல காட்சி அளிக்கிறார்கள். இதனால், தனது தோல்வியை மாற்றியமைக்க நெதன்யாகு அளவுக்கு அதிகமாகவே எதிர்வினையாற்றுவார். அப்படி செய்யும்போது, தனது புதிய அரபு நாட்டு பங்காளிகளிடமிருந்து அந்நியப்படுவார்.
இத்தகைய எதிர்வினைகள் எந்த வழியில் சென்றாலும், நெதன்யாகுவின் ஆட்சி வரலாறு தோல்விலேயே சிதையும். அதேசமயம், அவமானப்பட்டு மண்டியிட்டு வாழ்வதை விட நீதிக்காகவும் சுதந்திரத்திற்காகவும் தமது சொந்தக்காலில் நின்று மாண்டு போவதே தங்கள் பண்பு என்பதை பாலஸ்தீனியர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர். வரலாற்றின் படிப்பினைகளை இஸ்ரேலியர்கள் கவனிக்க வேண்டிய நேரம் இது.
[ALJAZEERA தளத்தில் வெளிவந்த From hubris to humiliation: The 10 hours that shocked Israel எனும் கட்டுரையைத் தழுவி எழுதப்பட்டது.]
கட்டுரையாளர்
ஆரூர் சலீம்