‘இன்னும் எத்தனை உயிர்களை இழக்கப் போகிறோம்?” ஜோதி துர்கா தற்கொலை குறித்து அரசியல் தலைவர்கள் கருத்து!

நீட் தேர்வு அச்சத்தால் மாணவி ஜோதி துர்கா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகத்தில் பலரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. மாணவர்களின் உயிரை காவு வாங்கி கொண்டிருக்கும் இந்த நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டுமென தமிழகத்தில் பல்வேறு கட்சி தலைவர்களும், மக்களும் குரல் கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் நீட் தேர்வால் தற்கொலை செய்து கொண்ட இந்த சம்பவம் குறித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கருத்து தெரிவித்துள்ளனர்

இது தொடர்பாக தமிழக துணை முதல்வர். ஓ. பன்னீர் செல்வம் கூறுகையில், “மதுரையைச் சேர்ந்த மாணவி செல்வி.ஜோதி ஸ்ரீ துர்கா அவர்கள் இன்று காலை தற்கொலை செய்து உயிரிழந்தார் என்ற துயரச்செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். மாணவியின் பிரிவால் மிகுந்த துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.
எதிர்காலத் தூண்களாகிய மாணவச்செல்வங்களின் இதுபோன்ற விபரீதமுடிவுகள் மிகுந்த துயரத்தை அளிக்கிறது. மாணவச்செல்வங்கள் மனம்தளராமல் எதையும் துணிந்து எதிர்கொள்ளும் தன்மையை வளர்த்துக்கொள்ள வேண்டுமெனவும் பெற்றோர்களும் மாணவர்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டுமெனவும் அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.” என்று கூறியுள்ளார்.

திமுக எம்.பி. கனிமொழி கூறுகையில், “நீட்டின் காரணமாக நடைபெறும் மரணங்கள் தற்கொலைகள் அல்ல. மத்திய மாநில அரசுகள் இணைந்து நடத்தும் கொலைகளே. காவல்துறை அதிகாரி முருகசுந்தரத்தின் மகள் ஜோதி துர்கா, நீட் தேர்வு அச்சத்தால் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். மாணவர்கள் தற்கொலை தொடர்கதையாகி வருகிறது.
கடந்த வாரம், தேனியை சேர்ந்த விக்கிரபாண்டி, உளுந்தூர்பேட்டையை சேர்ந்த நித்யஶ்ரீ ஆகியோர் ஆன்லைன் வகுப்புகளை கையாள முடியாமல் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். அதே வாரத்தில், அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த விக்னேஷ் என்பவர்.. நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்துகொண்டு இறந்தார். இன்னும் எத்தனை உயிர்களை இழக்கப் போகிறோம்?” என்று தெரிவித்துள்ளார்.

மாநிலங்களவை உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் கூறுகையில், “நீட் தேர்வு குறித்த அச்சத்தால் மதுரை மாணவி ஜோதிஸ்ரீ துர்கா தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி வேதனையளிக்கிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்து கொள்ளும் மாணவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் அதிகரித்து வரும் நிலையில் இது குறித்து மத்திய அரசு ஆராய வேண்டும். குறைந்த பட்சம் தமிழ்நாட்டில் மட்டுமாவது நீட் தேர்வை ரத்து செய்வதற்கு மத்திய அரசு முன்வர வேண்டும். நீட் ரத்தே தற்கொலைகளுக்கு தீர்வு!” என்று தெரிவித்துள்ளார்.

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்ட இரங்கல் செய்தியில், “மதுரையில் மாணவி ஜோதி துர்கா நீட் தேர்வுக்குத் தயாராகி கொண்டு இருந்த நேரத்தில் தாம் தோல்வியடைந்து விடுவோம் என்ற பயத்தில் மன உளச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்டது மிகவும் வேதனைக்குரியது வருந்தத்தக்கது.
அரியலூர் மாவட்டம் செந்துறையை அடுத்த எலந்தங்குழி என்ற கிராமத்தைச் சேர்ந்த விக்னேஷ் என்ற மாணவர் தோல்வி பயத்தால் ஒரிரு நாள்களுக்கு முன்னர் தற்கொலை செய்து கொண்ட வடு ஆறுவதற்கு முன் மாணவி ஜோதி துர்கா தற்கொலை செய்து கொண்டு இருப்பது மிகவும் வேதனைக்குரியது. மாணவ, மாணவியின் பெற்றோர்களுக்கு என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். நாளை (செப். 13) தேர்வு எழுத இருக்கும் மாணவர்கள் மன உளச்சலுக்கு ஆளாகாமல் பயத்தை விடுத்து தைரியத்துடன் தேர்வு எழுதுங்கள்; உங்கள் லட்சியம், கனவுகள் நிறைவேறும்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

அமமுக கட்சி பொதுச் செயலாளர் டிடிவி. தினகரன் தனது டிவிட்டர் பதிவில், “நீட் தேர்வு அச்சம் இன்னோர் உயிரைப் பலி வாங்கியிருக்கிறது. மதுரை மாணவி ஜோதிஸ்ரீ துர்காவின் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்ல முடியாமல் நெஞ்சம் விம்முகிறது. இன்னும் எத்தனை நாட்களுக்கு இந்த துயரம் தொடருமோ?” என்று குறிப்பிட்டுள்ளார்.