இந்துத்துவ அமைப்புகளின் எதிர்ப்பு!! நீக்கப்பட்ட தனிஷ்க் நகை நிறுவனத்தின் ‘ஒற்றுமையின் அழகு’ விளம்பரம்..

இஸ்லாமிய குடும்பத்தில் இந்து மருமகளுக்கு வளைகாப்பு நடத்துவது போன்று பிரபல நகை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட விளம்பரம் இந்துத்துவ அமைப்புகளின் எதிர்ப்பு காரணமாக நீக்கப்பட்டுள்ளது. நாட்டின் முன்னணி தொழில் நிறுவனமான டாடா குழுமத்தின் ஓர் அங்கமான தனிஷ்க் நகை தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனம் ஒற்றுமையின் அழகு என்ற தலைப்பில் வசீகரமான விளம்பரம் ஒன்றை அண்மையில் வெளியிட்டது.
தீபாவளிக்காக ஏகத்வம் என்னும் புதுவகையான நகை வகைகளை அறிமுகப்படுத்தும் விளம்பரத்தில், இஸ்லாமிய குடும்பத்தில் இந்து மருமகளுக்கு வளைகாப்பு நடத்தும் வகையிலும், உங்களின் பழக்கத்தில் இவையெல்லாம் பின்பற்றப்படுவதில்லையே என மருமகள் கேட்கும்போது, மகள்களை மகிழ்ச்சியாக வைக்கும் பண்பாடு அனைத்து குடும்பத்திலும் இருக்கிறதே என இஸ்லாமியரான அவரது மாமியார் தெரிவிப்பதுபோல் காட்சியமைக்கப்பட்டுள்ளது.
மத ஒற்றுமையை வலியுறுத்தி வெளியிடப்பட்ட இந்த விளம்பரம் ஆலா தரப்பினரையும் வெகுவாக கவர்ந்தது. ஆனால் குறிப்பிட்ட விளம்பரம் லவ் – ஜிகாதை தூண்டுவதாகவும் தனிஷ்க் நிறுவனத்தை புறக்கணிக்க வேண்டும் என்றும் இந்துத்துவ அமைப்புகள் சமூக வலைத்தளங்களில் பிரச்சாரத்தை நடத்தினர். இதையடுத்து குறிப்பிட்ட விளம்பரத்தை திரும்பப் பெறுவதாக அறிவித்த தனிஷ்க் நிறுவனம், பின்வாங்கியது. தற்போது அந்த விளம்பரத்தை யூ ட்யூபில் இருந்து நீக்கியிருக்கிறது தனிஷ்க் நிறுவனம்.