ஆண் இப்படித்தான் இருக்கணும் –  ஜேக்கப் டோனோவன் தொடர் 1

பட்டாளமாக நிற்பதே ஆண்களின் வழி!

ஒரு ஆண், ஆண்மகனுக்கு உரிய லட்சணத்தோடு வாழ வேண்டும் என்று யாராவது சொல்லும்போது, அதற்கு பின்னால் உள்ள அர்த்தம் என்ன? ஆணுக்கு என்று பிரத்யேக வழிமுறை உள்ளது என்பதைத்தான் அவர்கள் சொல்ல வருகிறார்கள். ஆண் என்பவன் ஏதோ சாதாரணமானவன் அல்ல. அவனுக்கு என்று பின்பற்றுவதற்கு ஒரு வழிமுறை உள்ளது; நடைபோட பாதை உள்ளது. சிலர் ஆண்மைக்கு எல்லைகளற்ற அர்த்தங்களை உருவாக்க முயல்கிறார்கள்; மற்றவர்களோ அதற்கு எவ்வித அர்த்தமும் இல்லை என்று வாதிடுகிறார்கள். ஒரு சிறந்த ஆளுமையுடன் விளங்குவது என்பது எல்லாவற்றையும் தீர்மானித்துவிட முடியாது, ஆனால் அதற்கு எப்போதும் ஒரு தனித்துவமான மதிப்பு இருந்து வந்துள்ளது.

ஆண்மையையும் பெண்மையையும் ஒன்றுக்கொன்று துணையாக நிற்கும் எதிர் துருவங்களாகவே பெரும்பாலான பாரம்பரியங்கள் பார்க்கின்றன. பெண்மைத் தன்மை இல்லாத இடத்தை ஆண்மை என்றும், ஆண்மைத் தன்மை இல்லாத இடத்தை பெண்மை என்றும் வரையறுப்பது எளிதுதான். ஆனால், இந்த வெற்று இலக்கணம் நமக்கு ‘ஆண்களின் வழிமுறை’ பற்றிப் பெரிதாக எதையும் சொல்லிவிடுவதில்லை.

ஆணும் பெண்ணும் பிறந்தவுடனேயே ஜோடி சேர்ந்து கொண்டு, ஏதோ ஒரு பாழடைந்த குகைக்குள் ஓடி ஒளிந்து கொள்வதில்லை. மனிதர்கள் எப்போதுமே கூட்டமாக வாழும் சமூக விலங்குகள். நாம் ஒருவருக்கொருவர் கைகோர்த்து, குழுக்களாகவே வாழ்கிறோம். நம் உடல் அமைப்புதான் நம்மை ஆண், பெண் என்று பிரிக்கிறது. நாமும் சமூகத்தில் ஏதோ ஒரு குழுவின் அங்கமாகவே வலம் வருகிறோம். இந்தக் குழுக்கள் ஏதோ தற்செயலாகவோ அல்லது கலாச்சாரத்தாலோ உருவானவை அல்ல—அவை அடிப்படையானவை, இயற்கையான உயிரியல் ரீதியானவை.

ஆண்கள், ஆண்-பெண் உலகை ஆண்களாகவே எதிர்கொள்ள பழக வேண்டும். ஆண்கள் எப்போதும் பெண்களுக்கு மட்டுமே எதிர்வினை ஆற்றுபவர்கள் அல்ல; நாம் பிற ஆண்களையும் ஆண்களாகவே எதிர்கொள்கிறோம். நாம் யார் என்பதை, பிற ஆண்களுடனான நம் உறவும், அந்த ஆண் வர்க்கத்தின் ஒரு அங்கமாக நம்மை நாம் எப்படிப் பார்க்கிறோம் என்பதுமே பெரிதும் தீர்மானிக்கிறது.

ஒரு ஆண் என்பவன் வெறும் தனி மனிதன் அல்ல; அவன் ஆண்களின் உலகத்தில், ஆண்களுக்கு இடையே வாழும் ஒரு ஆண்மகன். ஒரு சிறந்த ஆணாக விளங்குவது என்பது, ஒரு பெண் அல்லது பெண்களின் குழுவோடு அவன் வைத்திருக்கும் உறவை விட, மற்ற ஆண்களோடு மற்றும் ஆண்களின் குழுக்களுக்குள் அவன் எப்படி வெற்றிகரமாகச் செயல்படுகிறான் என்பதைப் பொறுத்தே அமைகிறது. ஒருவனை ‘ஆணாக இரு’ என்று சொல்லும்போது, அவர்கள் அவனை மற்ற ஆண்களைப் போல, பெரும்பான்மை ஆண்களின் குணங்களோடு, இன்னும் சொல்லப்போனால் மற்ற ஆண்களால் மதிக்கப்படும் ஒரு சிறந்த ஆண்மகனைப் போல வாழச் சொல்கிறார்கள்.

சரி, ஆண்மையைப் பற்றியப் பெண்களின் நினைப்பு என்னவாக இருக்கிறது? “பெண்களின் விருப்பம் எதுவோ, அதை நிறைவேற்றுவதுதான் ஆண்மை; அதன் மூலம் ஆண்களைத் தங்களால் நல்வழிப்படுத்தவோ அல்லது மேம்படுத்தவோ முடியும்” என்று பெண்கள் பொதுவாக நம்புகிறார்கள். ஆண்கள் தங்களைப் பெண்கள் விரும்ப வேண்டும் என்று நினைப்பது உண்மைதான். ஆனால், அது முழு உண்மை அல்ல.  பெண்களின் அங்கீகாரம் மட்டுமே அவர்களின் இறுதி இலக்கு கிடையாது.

அப்படியென்றால் ஆண்களின் போட்டி எதற்கானது? ஆண்கள் தங்களின் சமூக அந்தஸ்துக்காகத் தங்களுக்குள் போட்டியிடும் போது, அவர்கள் உண்மையில் மற்ற ஆண்களின் அங்கீகாரத்தைப் பெறவே துடிக்கிறார்கள். வரலாற்றைத் திரும்பிப் பார்த்தால், பெண்கள் எந்த ஆண்களைத் தங்களின் நாயகர்களாகக் கொண்டாடினார்கள் தெரியுமா? பிற ஆண்களால் அஞ்சப்பட்ட அல்லது தலைவனாக மதிக்கப்பட்ட ஆண்களைத்தான்! இதிலிருந்து என்ன தெரிகிறது? பெண்களின் அங்கீகாரம் என்பது, ஆண்கள் தங்களுக்குள் கொடுக்கும் கூட்டு அங்கீகாரத்தின் மூலம் தானாகக் கிடைக்கும் ஒரு உபவிளைவு மட்டுமே!

ஒருவேளை ‘ஆண்களின் வழி’ (The Way of Men) உங்களுக்குக் குழப்பமாகத் தோன்றினால், அதற்குப் பின்னால் ஒரு முக்கியக் காரணம் இருக்கிறது. இந்த சமூகத்தில் பலதரப்பட்ட ஆண்களின் குழுக்கள் இயங்குகின்றன; அவர்கள் ஒவ்வொருவரும் ஒரு ஆணிடம் இருந்து வெவ்வேறு விஷயங்களை எதிர்பார்க்கிறார்கள். உதாரணத்திற்கு, அதிகாரத்திலும் செல்வச் செழிப்பிலும் உச்சத்தில் இருக்கும் ஆண்களை எடுத்துக் கொள்வோம். அவர்கள் எப்போதுமே பிற ஆண்களை என்ன நம்ப வைக்க முயல்கிறார்கள் தெரியுமா? ஆண்மை என்பது கடமை தவறாமல் இருப்பதும், அதிகாரத்திற்குக் கீழ்ப்படிந்து நடப்பதும்தான் என்று போதிக்கிறார்கள். அல்லது, ஏற்கனவே சமூகம் வகுத்து வைத்திருக்கும் பாதையில் சென்று பணத்தையும் பதவியையும் அடைவதுதான் உண்மையான ஆண்மைக்கான அடையாளம் என்று வாதாடுகிறார்கள்.

மறுபுறம், மதம் மற்றும் குறிப்பிட்டக் கொள்கையுடையவர்கள் என்ன சொல்கிறார்கள்? ஆண்மை என்பது ஒரு ஆன்மீக முயற்சி என்றும்; சுயக்கட்டுப்பாடு, சுயமறுப்பு மற்றும் தியாகத்தின் மூலமே அதனை நிரூபிக்க முடியும் என்றும் வாதிடுகிறார்கள். இது ஒருபுறமிருக்க, வியாபார நோக்கத்தோடு எதையாவது விற்க நினைப்பவர்களோ, ஒரு குறிப்பிட்ட பொருளை வாங்குவதன் மூலமே உங்களின் ஆண்மையை மேம்படுத்தவோ அல்லது நிரூபிக்கவோ முடியும் என்று ஆண்களை நம்ப வைக்கப் பார்க்கிறார்கள்.

தனித்துவமான அடையாளமும், ஒற்றுமையும் கொண்ட ஒரு பழங்குடி சமூகத்தில், ஆண்களின் குழுக்களுக்கு இடையே ஒரு இணக்கம் இருக்கும். அங்கே ‘ஆண்களின் வழி’ என்பது மிகவும் தெளிவானதாக, நேர்க்கோடாகத் தோன்றும். ஆனால், சுயநலம் மிகுந்த, பன்முகத்தன்மை கொண்ட, ஒற்றுமையற்ற இன்றைய நவீன உலகத்தில் ‘ஆண்களின் வழி’ என்பது முற்றிலும் குழப்பமானதாக மாறிவிடுகிறது.

செல்வாக்கு மிக்கவர்களும் காட்டும் வழி ஒருபுறம்; மதகுருமார்களும் கொள்கைவாதிகளும் காட்டும் வழி மறுபுறம்; இதோடு வியாபாரிகளின் விளம்பர மாயைகளும் சேர்ந்து கொள்வதால் ஒட்டுமொத்தமாக எல்லாம் குழம்பிப் போகிறது. இதனால்தான் சிலர் ஆண்மைக்கு எல்லைகளற்ற அர்த்தங்களை உருவாக்குகிறார்கள், மற்றவர்களோ அதற்கு எவ்வித அர்த்தமும் இல்லை என்று வாதிடுகிறார்கள். இதனுடன், பெண்கள் தங்களின் விருப்பத்திற்கேற்ப ஆண்களை ‘நல்வழிப்படுத்த’ கொடுக்கும் ஆலோசனைகளையும் சேர்த்துக் கொண்டால்… ‘ஆண்களின் வழி’ என்பது கடைசியில் அர்த்தமற்ற கொள்கைகளின் குப்பைமேடாகவே மாறிவிடுகிறது!

ஆண்கள் உண்மையில் யார், அவர்களுக்குள் இருக்கும் பொதுவான குணங்கள் என்ன, மற்றும் பிற ஆண்களிடம் தங்களை நிரூபிக்க அவர்கள் ஏன் இவ்வளவு போராடுகிறார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டுமா? அதற்கு, ஆண்களின் குழுக்களை அவற்றின் மிக அடிப்படையான, ஆரம்பகால வடிவத்திற்குச் சுருக்கிப் பார்க்க வேண்டும். கோடிக்கணக்கான மக்கள் வாழும் இந்த பிரம்மாண்டமான, சிக்கலான நவீன நாகரிகங்கள் மனித வரலாற்றில் ஆண்களுக்கு மிகவும் புதியவை. இந்த பூமியில் தங்களின் பெரும்பாலான காலத்தை ஆண்கள் எப்படித் தெரியுமா கழித்திருக்கிறார்கள்? ஒரு கடுமையான, சவாலான சூழலை எதிர்கொண்டு, உயிர் பிழைப்பதற்காகச் சிறிய சிறிய குழுக்களாகவே வாழ்ந்திருக்கிறார்கள். பெண்களுக்காகவும், வாழ்வாதார வளங்களுக்காகவும் பிற ஆண் குழுக்களோடு போட்டியிட்டிருக்கிறார்கள். எனவே, ஆண்கள் ஒருவருக்கொருவர் எப்படி எதிர்வினை ஆற்றுகிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள, அவர்களின் மிக அடிப்படையான அந்த சமூகக் கட்டமைப்பை நாம் ஆராய வேண்டும்.

ஆண்கள் தங்களுக்குள் ஒருவரிடமிருந்து ஒருவர் எதை எதிர்பார்க்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள, வரலாற்று ரீதியாக அவர்கள் ஒருவரிடமிருந்து ஒருவர் எதை அதிகம் நாடியிருக்கிறார்கள் என்பதை நாம் முதலில் ஆழமாகத் தெரிந்து கொள்ள வேண்டும். மேலும், இந்தத் தேவைகள் எப்படி ஆண்களின் உளவியலை (Psychology) வடிவமைத்துள்ளன என்பதையும் நாம் உணர்ந்தாக வேண்டும்.

ஒழுக்கவாதப் பாசாங்குகளையும், பாரம்பரியப் பகட்டுகளையும் நாம் சற்றே கழற்றி எறிந்துவிட்டுப் பார்ப்போம். ஒவ்வொரு ஆணின் அடிமனதிற்கும் (Gut) தெரிந்த அந்த அசல் ஆண்மை (Raw Masculinity) எதோடு தொடர்புடையது தெரியுமா? உயிர் பிழைப்பதற்காகப் போராடும் ஒரு சிறிய, சவால்கள் நிறைந்த ஆண்களின் குழுவிற்குள், ஒரு சிறந்த ஆண்மகனாக விளங்குவது எப்படி என்பது மட்டுமே அதன் மையப்புள்ளி.

சுருக்கமாகச் சொன்னால், பட்டாளமாக நிற்பதே ஆண்களின் வழி!

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x