‘ஈரான்-அமெரிக்கா’, அமைதி ஒப்பந்தத்தால் ஆத்திரம்’: டிரம்பை ‘துரோகி’ என வசைபாடும் இஸ்ரேலிய ஆதரவாளர்கள்!
"இஸ்ரேல் பலவீனமடைந்துவிட்டது" என்பதே, டெல் அவிவ் (Israel) முழுக்க, தற்போது எதிரொலிக்கும் அரசியல் அதிர்வலை சொல்லாக மாறியுள்ளது.

மத்திய கிழக்கில் கடந்த சில மணிநேரங்களில் அரங்கேறியுள்ள அதிரடித் திருப்பங்கள், இஸ்ரேலிய அரசியல் வட்டாரத்தை மொத்தமாக கொந்தளிப்படைய செய்துள்ளன. அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே அதிகாரப்பூர்வமாக ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தம் (Peace Agreement) எட்டப்பட்டுவிட்டதாக, பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் அண்மையில் தனது எக்ஸ் (X) பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். கடந்த பிப்ரவரியில், டிரம்ப் மற்றும் நெதன்யாகு தொடங்கிய அமெரிக்க-இஸ்ரேல் கூட்டு ஈரான் போரை, முற்றிலுமாக முடிவுக்குக் கொண்டுவரும் இந்த ஒப்பந்தம், லெபனான் உட்பட அத்தனை முனைகளிலும் ராணுவ நடவடிக்கைகளை உடனடியாகவும் நிரந்தரமாகவும் நிறுத்தக் கட்டளையிடுகிறது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் “நாடகம் முடிந்தது, ஒப்பந்தம் முழுமையடைந்துவிட்டது” (Deal complete) என்று அறிவித்துள்ள நிலையில், வரும் வெள்ளிக்கிழமை சுவிட்சர்லாந்தில் இதற்கான இறுதி ஆவணங்கள் கையெழுத்தாகவுள்ளன. ஆனால், இந்த அமைதிச் செய்தி இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்குள் ஒரு மாபெரும் அரசியல் பிரளயத்தையும், கோபத்தையும் கிளப்பியுள்ளது. இந்த ஒப்பந்தம் இஸ்ரேலின் முதுகெலும்பை முறிக்கும் ஒரு “தலைகீழ் சதி” என்று கொதிப்படைந்துள்ள இஸ்ரேலிய அதிகாரிகள், “டிரம்பின் இந்த ஒப்பந்தம் எங்களைக் கட்டுப்படுத்தாது; நாங்கள் போரை நிறுத்தப் போவதில்லை” என்று தொடர்ந்து கூறிவருகின்றனர். அதன்படி, லெபனான் மீது தங்களின் கண்மூடித்தனமான குண்டுவீச்சைத் தொடர்ந்து நடத்தி வருகிறார்கள்.
இஸ்ரேலிய செய்தி நிறுவனமான Ynet வெளியிட்டுள்ள ரகசியத் தரவுகளின்படி, பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அதிபர் டிரம்பிடம், “இஸ்ரேல் இந்த ஒப்பந்தத்திற்கு அடிபணியாது, லெபனானில் ஈரானின் நிபந்தனைகளை நாங்கள் ஒருபோதும் ஏற்க மாட்டோம்” என்று கோபமாக கூறியுள்ளார்.
இஸ்ரேலின் பாதுகாப்புத்துறை அமைச்சரான இஸ்ரேல் காட்ஸ் (Israel Katz) ஒரு படி மேலே போய், டிரம்ப் மற்றும் பாகிஸ்தானின் அமைதிப் பிரகடனத்தை ஒட்டுமொத்தமாக கடுமையாக சாடியுள்ளார். அவர், “லெபனான், சிரியா மற்றும் காஸாவின் பாதுகாப்பு வளையங்களுக்குள் எந்தவொரு கால வரம்பும் இன்றி (Without any time limit) இஸ்ரேலிய ராணுவம் நிரந்தரமாக முகாமிட்டிருக்கும்” என்று திட்டவட்டமாக கூறியுள்ளார். அத்துடன் நில்லாமல், தாங்கள் ஆக்கிரமித்துள்ளப் பகுதிகளில் இருக்கும் பொதுமக்களின் குடியிருப்பு வீடுகள் அனைத்தையும் “பயங்கரவாத உள்கட்டமைப்புகள்” என்று முத்திரை குத்தி, அவற்றை மொத்தமாக இடித்துத் தரைமட்டமாக்கப் போவதாகவும் அச்சுறுத்தியுள்ளார்.
மறுபுறம், தீவிர வலதுசாரி நிதியமைச்சரான பெசலெல் ஸ்மோட்ரிச் (Bezalel Smotrich) தனது எக்ஸ் பக்கத்தில், “ஈரானுடனான இந்த ஒப்பந்தம் இஸ்ரேலுக்கும், ஒட்டுமொத்த சுதந்திர உலகிற்கும் இழைக்கப்பட்ட ஆகப்பெரும் துரோகம்” என்பதாக தெரிவித்துள்ளார். பெய்ரூட்டின் குடியிருப்புப் பகுதிகளை முற்றிலும் தரைமட்டமாக்க வேண்டும் என்று தொடர்ந்து வெறிக்கூச்சல் எழுப்பி வரும் இவர், அமெரிக்காவின் உடன்படிக்கையைப் புறந்தள்ளிவிட்டு, லெபனானில் இஸ்ரேலிய ராணுவத்திற்கு முழுமையான வான்வழித் தாக்குதல் சுதந்திரத்தை (Full freedom of action) அள்ளிக் கொடுப்பேன் என்று சபதம் செய்துள்ளார்.
இஸ்ரேலின் தேசிய பாதுகாப்பு அமைச்சரான இத்தாமர் பென் கிவீர் (Itamar Ben Gvir) மிகக் காட்டமாக, “டிரம்பின் ஒப்பந்தம் எங்களைத் துளிகூடக் கட்டுப்படுத்தாது. இஸ்ரேல் ஒன்றும் அமெரிக்காவின் அடிமை நாடு கிடையாது; நாங்கள் ஒரு சுதந்திரமான, இறையாண்மை கொண்ட தேசம்! இஸ்ரேல் ஒன்றும் ‘பனானா குடியரசு’ (Banana Republic) அல்ல!” என்று அமெரிக்க அதிபரை காட்டமான வார்த்தைகளால் தாக்கியுள்ளார்.
கலாச்சாரத்துறை அமைச்சர் மிகி ஜோஹர், “இஸ்ரேலுக்கு ஒரு பிரச்னை ஏற்பட்டால், அதற்காக ஈரானியர்கள் எங்கள் முன்னால் மண்டியிடுவது மட்டுமல்லாமல், தங்களின் தலைகளையும் குனிய நேரிடும; அவர்கள் மீது மாபெரும் அணுஆயுத வீரியத்துடன் பாய்வோம்” என்று நெருப்பு வார்த்தைகளை கக்கியுள்ளார்.
“டிரம்ப் ஒரு லூசர்… ஜேடி வான்ஸ் ஒரு சாக்கடை!”
நெதன்யாகுவின் அமைச்சர்கள் டிரம்ப்பை நேரடியாக விமரிசிப்பதைத் தந்திரமாகத் தவிர்த்தாலும், நெதன்யாகுவின் ஆகப்பெரும் ஊதுகுழலாக (Mouthpiece) விளங்கும் இஸ்ரேலின் முன்னணிப் பத்திரிகையாளர்கள், அமெரிக்க அதிபர் மீது தங்களின் அசிங்கமான வசவுகளை வாரி இறைத்துத் தங்களின் ஆத்திரத்தைத் தீர்த்துக் கொள்கிறார்கள். இஸ்ரேலின் ‘சேனல் 14’ நியூஸ் பத்திரிகையாளரான யினோன் மாகல் (Yinon Magal) தனது எக்ஸ் பக்கத்தில், “அமெரிக்கா எங்களை நடுக்கடலில் கைவிட்டுவிட்டது. டிரம்ப் ஒரு அப்பட்டமான ‘லூசர்’ (Loser)! அவரது துணை அதிபரான ஜேடி வான்ஸ் (JD Vance) ஒரு சாக்கடை குப்பை (Scum)!” என்று வசைபாடியுள்ளனர். அத்துடன் நில்லாமல், அமெரிக்காவின் மத்திய கிழக்குத் தூதர்களான ஜாரெட் குஷ்னர் மற்றும் ஸ்டீவ் விட்காஃப் ஆகியோரை “சிறு யூத எச்சங்கள்” என்றும் விமர்சித்துள்ளனர்.
இஸ்ரேலின் முன்னணி வலதுசாரி சிந்தனைக் குழுவான ‘ஐடிஎஸ்எஃப்’ (IDSF), “வரலாறு ரீதியாக, ஈரானிய பயங்கரவாத அரசோடு அமெரிக்கா போடும் எந்தவொரு ஒப்பந்தமும் படுதோல்வியில்தான் முடியும்; இந்த ஒப்பந்தமும் அதற்கு விதிவிலக்கல்ல” என்று சாபமிட்டுள்ளது.
நெதன்யாகுவின் நாற்காலியை பறிக்க துடிக்கும் எதிர்க்கட்சிகள்
அரசாங்கப் பக்கம் இத்தனைப் போர்க்குரல்கள் கேட்டாலும், இஸ்ரேலின் எதிர்க்கட்சித் தலைவர்கள் தற்போதையச் சூழலை நெதன்யாகுவின் நாற்காலியை பறிப்பதற்கான வியூகமாக பயன்படுத்தி வருகின்றனர். இஸ்ரேலின் மைய-இடதுசாரி ‘டெமாக்ரடிக்ஸ்’ கட்சியின் தலைவரான யாயிர் கோலன் (Yair Golan), பிரதமரை நோக்கி சரமாரியான தாக்குதல்களை ஏவி வருகிறார். “நெதன்யாகு பலவீனமானவர். உலக அரங்கில் முற்றிலும் தனிமைப்படுத்தப்பட்ட ஒரு செல்வாக்கற்ற பூஜ்ஜியமாக மாறியுள்ளார்!” என்று சாடியுள்ளார். “ஈரானின் அணுசக்தி மற்றும் ஏவுகணைத் திட்டங்களைச் சிதைக்காமல், மாறாக அவர்களின் முடக்கப்பட்ட பில்லியன் டாலர் சொத்துக்களை மீண்டும் ஈரானிடமேத் ஒப்படைக்கும் ஒரு ஒப்பந்தத்தில் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார். நெதன்யாகுவின் பல வருட தவறான வியூகக் கொள்கைகளின் இறுதி லட்சணம் இதுதான்; இன்று இஸ்ரேல் வரலாற்றிலேயே இல்லாத அளவிற்குப் பலவீனமடைந்துவிட்டது (Israel is weaker)!” என்று கோலன் காட்டமாக கூறியுள்ளார்.
இஸ்ரேலின் அடுத்த பிரதமராகக் களம் காணும் முன்னாள் ராணுவத் தளபதி காடி ஐசன்கோட் (Gadi Eisenkot), “கடந்த மூன்று ஆண்டுகால யுத்தங்களின் இறுதி முடிவு — ஒரு தகுதியற்ற, படுதோல்வி அடைந்த அரசாங்கத்தின் (Failed government) லட்சணத்தைத்தான் நமக்குக் காட்டுகிறது” என்று சாடியுள்ளார். முன்னாள் பிரதமர் நாப்தலி பென்னட்டும் (Naftali Bennett) தனது பங்குக்கு நெதன்யாகுவைச் சாடி, “இந்த அரசு எங்களை இழுபறிப் போர்களிலும் முடக்கத்திலும் மட்டுமேத் தள்ளியுள்ளது; வரும் அக்டோபர் தேர்தலில் நெதன்யாகுவை ஒட்டுமொத்தமாக வீழ்த்தி, ஈரானியத் தலைமையைக் கவிழ்ப்பதற்கான புதிய வியூகத்தை நான் கையில் எடுப்பேன்” என்று முழங்கியுள்ளார்.
“இஸ்ரேல் பலவீனமடைந்துவிட்டது” என்பதே தற்போது டெல் அவிவ் (Israel) முழுக்க எதிரொலிக்கும் அரசியல் அதிர்வலை சொல்லாக மாறியுள்ளது.