சசிகலா சிறை தண்டனை குறித்த தகவல்களை வழங்க வேண்டும் என்று உத்தரவிட்ட தகவல் உரிமை ஆணையம்!!
சசிகலா சிறை தண்டனை குறித்த தகவல்களை வழங்க வேண்டும் என்று பெங்களூரு சிறைத்துறைக்கு, அம்மாநில தகவல் ஆணைய அதிகாரி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
சொத்து குவிப்பு வழக்கில், முன்னாள் முதல்வர் ஜெயலிலதாவின் தோழி, சசிகலா, அவரது உறவினர்கள், இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து, அவர்கள் அனைவரும் பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் சிறையில் உள்ள கைதிகளுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில், விடுமுறை காலத்தை கழித்தால், மீதியுள்ள காலத்தின்படி சசிகலா முன்கூட்டியே விடுதலையாக வாய்ப்பு உள்ளதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.
ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டவர்களுக்கு இந்த விடுமுறை நாட்கள் சலுகை பொருந்தாது என்றும் ஒரு தகவல் உலா வருகிறது. இந்நிலையில் பெங்களூருவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் டி.நரசிம்மமூர்த்தி, தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் சசிகலாவின் விடுதலை குறித்து சிறை நிர்வாகத்திடம் கேள்வி எழுப்பி இருந்தார். ஆனால், சசிகலா பற்றிய தகவல்களை 3-வது நபருக்கு வழங்குவது சட்டவிரோதம் என தகவல்களை வழங்க மறுத்துவிட்டது.
இதனை எதிர்த்து, கர்நாடக மாநில தகவல் ஆணைய அதிகாரியிடம் நரசிம்மமூர்த்தி மேல்முறையீடு செய்தார். சசிகலாவின் தண்டனை மற்றும் விடுதலை உள்ளிட்டவை எல்லாம் பொதுவான விவரங்கள் என்றும், எனவே, அவைகளை வழங்கலாம் என்றும் சிறைத்துறையினருக்கு தகவல் ஆணையம் உத்தரவிட்டது.
முன்னதாக வரும் 2021-ம் ஆண்டு ஜனவரி 27-ம் தேதி சசிகலா விடுதலை ஆவார் என்பதும், நீதிமன்றம் கூறியபடி அபராதத்தொகை செலுத்தாவிட்டால் மேலும் ஒரு ஆண்டு சிறையில் இருக்க நேரிடும் என்பது குறிப்பிடத்தக்கது.