சென்னை விமான நிலையத்தில் இருந்து விம்கோ நகருக்கு மெட்ரோ ரயில் கட்டணமாக ரூ.70 நிர்ணயம்..

சென்னை விமான நிலையத்தில் இருந்து விம்கோ நகருக்கு மெட்ரோ ரயில் கட்டணமாக ரூ.70 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சென்னை வண்ணாரப்பேட்டையில் இருந்து விம்கோ நகருக்கு மெட்ரோ ரயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இவ்வழித்தடத்துக்கான மெட்ரோ ரயில் கட்டணம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி சென்னை விமான நிலையத்தில் இருந்து மீனம்பாக்கத்துக்கு ரூ.10, நங்கநல்லூர் சாலை ரூ.20, ஆலந்தூர் – ரூ.30, கிண்டி, சின்னமலை, சைதாப்பேட்டை, நந்தனம், தேனாம்பேட்டை வரையில் – ரூ.40, டிஎம்எஸ், ஆயிரம் விளக்கு, எல்ஐசி, அரசினர் தோட்டம், சென்னை சென்ட்ரல் வரையில் – ரூ.50, உயர் நீதிமன்றம், மண்ணடி, வண்ணாரப்பேட்டை, தியாகராய கல்லூரி – ரூ.60, தண்டையார்பேட்டை, புதிய வண்ணாரப்பேட்டை, சுங்கச்சாவடி, காலடிப்பேட்டை, திருவொற்றியூர், வரையில் ரூ.70 என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:

சென்னை மெட்ரோ ரயில் சேவை, வடசென்னையுடன் இணைக்கப்பட்டுள்ளதால், பயணிகளின் எண்ணிக்கை 2 லட்சமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம். பயணிகளின் கோரிக்கையை கருத்தில்கொண்டு வார நாட்களில் (திங்கள் – சனிக்கிழமை) உச்ச நேரங்களில் 7 நிமிடங்களில் இயக்கப்பட்ட மெட்ரோ ரயில்கள், தற்போது 5 நிமிட இடைவெளியில் இயக்கப்படுகின்றன. இதன்படி காலை 8 மணி முதல் 10 மணி வரை மற்றும் மாலை 4 மணி முதல் 7 மணி வரை 5 நிமிட இடைவெளியிலும் மற்ற நேரங்களில் 10 நிமிட இடைவெளியிலும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.

இரவு 10 முதல் 11 மணி வரையில் 28 நிமிடங்களுக்கு பதிலாக 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். ஞாயிறு மற்றும் அரசு பொது விடுமுறை நாட்களில் 20 நிமிட இடைவெளியில் இயக்கப்படும். பயணிகளின் தேவைக்கு ஏற்ப கூடுதல் ரயில்களை இயக்க நாங்கள் தயாராக உள்ளோம்.

பயணிகளுக்கு சிறப்பான, பாதுகாப்பான சேவையை வழங்குவதே எங்களது நோக்கமாகும். பயணிகளை ஈர்க்கும் வகையில் சிறப்பு சலுகைகளை வழங்கி வருகிறோம். மெட்ரோ ரயில் கட்டணத்தை குறைப்பது தொடர்பாக நாங்கள் எதுவும் தெரிவிக்க முடியாது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x