பயணிக்கும் முன்பே கட்டணம் வசூல்.. ‘பாஸ்டேக்’-ல் குளறுபடி..?

பழனியை சேர்ந்த தனியார் நிறுவன பணியாளர் ஒருவர் ‘பாஸ்டேக்’ ஸ்டிக்கரை தனது காரில் ஒட்டும் முன்பே, அது ஒடிசாவில் பயணித்ததாக கட்டணம் வசூலிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாடு முழுவதும் சுங்கச்சாவடிகளில் கட்டணம் செலுத்த மின்னணு முறையான ‘பாஸ்டேக்’ கடந்த 15-ந்தேதி கட்டாயமாக்கப்பட்டது. மேலும் ‘பாஸ்டேக்’ ஸ்டிக்கர் இல்லாமல், செயல்படாத ஸ்டிக்கர் ஒட்டி சுங்கச்சாவடிகளை கடக்கும் வாகனங்களுக்கு இருமடங்கு கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் அறிவித்தது. இதையடுத்து பெரும்பாலானோர் தங்களது வாகனங்களில் ‘பாஸ்டேக்’ ஸ்டிக்கர் ஒட்டி பயணித்து வருகின்றனர்.

இந்தநிலையில் திண்டுக்கல் மாவட்டம் பழனி சண்முகபுரம் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ். இவர் பழனியில் தனியார் நிறுவனத்தில் விற்பனை பிரிவில் பணியாற்றி வருகிறார். இவர் தனது காரில் ஒட்டுவதற்காக கடந்த மாதம் 8-ந்தேதி ‘பாஸ்டேக்’ ஸ்டிக்கரை வாங்கினார். ஆனால் அந்த ஸ்டிக்கரை காரில் ஒட்டாமல், வீட்டில் வைத்திருந்தார்.

இதற்கிடையே கடந்த மாதம் 21-ந்தேதி அவரது செல்போனுக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதில் அவரது கார், ஒடிசா மாநிலம் செர்கரா சுங்கச்சாவடியை கடந்ததற்காக ரூ.60 பிடித்தம் செய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டு இருந்தது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக இதுகுறித்து பழனியில் உள்ள வங்கியில் புகார் செய்தார். ஆனால் வங்கி தரப்பில் இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டதாக தெரிவித்தனர். ஆனால் இதுவரையில் அவரது பணம் திரும்ப கிடைக்காததால் அவர் அதிர்ச்சி அடைந்து உள்ளார்.

இதுகுறித்து செல்வராஜ் கூறுகையில், சாதாரண மக்கள் முதல் அனைத்து தரப்பினரும் பயன்படுத்தும் முறையாக ‘பாஸ்டேக்’ கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆனால் ‘பாஸ்டேக்’ ஸ்டிக்கரை பயன்படுத்தாமலேயே அதற்கான கட்டணம் வசூலிக்கப்பட்டது, கட்டணம் பிடிப்பு குறித்து முறையான குறுஞ்செய்தி வராமல் இருப்பது என பல்வேறு குளறுபடிகள் உள்ளன. எனவே முதலில் அதில் உள்ள குளறுபடிகளை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

பழனியை சேர்ந்தவரின் காரில் பாஸ்டேக் ஸ்டிக்கர் ஒட்டுவதற்கு முன்பே, அது ஒடிசா மாநிலத்தில் பயணித்ததாக கட்டணம் வசூலித்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x