உலக ஓப்பன் செஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்த தமிழக வீரர்!

அமெரிக்காவில் நடைபெற்ற உலக ஓபன் 2020 செஸ் போட்டியில் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த இந்திய கிராண்ட் மாஸ்டர் பி.இனியன் முதலிடம் பெற்று அசத்தியுள்ளார். இணையதளம் மூலம் நடைபெற்ற போட்டியில் இந்தியா சார்பில் இனியன் கலந்து கொண்டார்.

அமெரிக்காவில் உள்ள பிலடெல்பியா நகரில் 1973-ம் ஆண்டு முதல் உலக ஓபன் செஸ் போட்டிகள் நடைபெற்று வருகின்றன, இந்த ஆண்டு கொரோனா லாக்டவுன் காரணமாக செஸ் போட்டி இணையதளம் மூலம் நடத்தப்பட்டது.

ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற இந்த போட்டியில் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயதான கிராண்ட் மாஸ்டர் பி.இனியன் கலந்து கொண்டார். ஆகஸ்ட் 7,8,9 ஆகிய தேதிகளில் போட்டி நடைபெற்றன. ஒவ்வொரு நாளும் மூன்று போட்டிகள் நடைபெற்றன. இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷ்யா, ஸ்பெயின் உள்ளிட்ட 16 நாடுகளைச் சேர்ந்த 122 வீரர்கள் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்ட இனியன், தொடர்ச்சியாக 6 போட்டிகளில் வெற்றி பெற்றும் 7.5 புள்ளிகள் பெற்றார்.

இறுதி போட்டியில் ரஷ்யா கிராண்ட் மாஸ்டர் சனன் சுஜிரோவ் மற்றும் அஜர்பைஜான் கிராண்ட் மாஸ்டர் குசினோவ் காதிர் ஆகியோர் மோதினர். அந்த ஆட்டம் சமனில் முடிந்தது. இறுதியில் ஒரே புள்ளியில் இனியன் மற்றும் சனன் சுஜிரோவ் சமமாக இருந்தனர். அவர்களுக்கு இடையே நடைபெற்ற டை-பிரேக்கில் இந்திய வீரர் இனியன் முதலிடம் பிடித்தார்.

போட்டி முடிந்து சில வாரங்கள் கடந்த நிலையில், முழுமையான சோதனைக்குப் பின்னர் போட்டி நடத்திய அமைப்பாளர்கள் இப்போது முடிவை அறிவித்துள்ளனர். அதில் இந்திய கிராண்ட் மாஸ்டர் இனியன் முதலிடம் பிடித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவை சேர்ந்த ஒருவர் இந்த போட்டிகளில் முதலிடம் பிடிப்பது இதுவதே முதல்முறையாகும். அவரை வாழ்த்தும் விதமாக தூத்துக்குடி தொகுதி மக்களவை உறுப்பினர் கனிமொழி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ‘2020 அமெரிக்க வேர்ல்ட் ஓப்பன் சதுரங்க போட்டியில், முதலிடம் பிடித்த தமிழகத்தைச் சேர்ந்த இனியன் பன்னீர்செல்வத்திற்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்’ என்று கூறியுள்ளார். மேலும் அதில் தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ள இனியன் மேலும் பல்வேறு வெற்றிகளை குவிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x