மூணாறு போல் கொடைக்கானல் மாறிவிடக்கூடாது – எச்சரிக்கும் சமூக ஆர்வலர்கள்
மூணாறு மாவட்டம் இடுக்கியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் கொடைக்கானலில் அது போன்ற அசம்பாவிதம் ஏற்படாதவாறு மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர் அப்பகுதியினர்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் தகுதியில்லா இடங்களில் கட்டுமானங்கள் முளைத்துள்ளன. அதே போல் மலைப் பகுதியில், இயந்திர பயன்பாடுக்கு தடை இருப்பினும், அதிகாரிகள் அலட்சியத்தால் அவை பயன்படுத்தப்படுகின்றன. போர்வெல் போடப்பட்டால் பாறைகள் நழுவும் என்கின்றனர் வல்லுநர்கள். அதனையும் மதிப்பதில்லை.
கடந்த, 2018ல் ஏற்பட்ட ‘கஜா’ புயலின் போது கார்மேல்புரம், தந்திமேடு, பெருமாள்மலை, வடகவுஞ்சி பகுதிகளில் மண்சரிவு ஏற்பட்டது. இவை எல்லாம் புவியியல் வல்லுனர்களால் ஏற்கனவே பேரிடர் பகுதியாக அடையாளம் காணப்பட்டுள்ளன. கனமழை நேரத்தில், ஆங்காங்கே சாலையோர மண் சரிவு வாடிக்கையானதாக உள்ளது.
மழைக்கு முன்பாக ஆக்கிரமிப்புகளை அகற்றி, வெள்ள நீர் செல்ல வாய்க்கால்களை விரிவுப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.