தேர்வுகளை ஒத்தி வைக்கக்கோரி இந்திய மாணவர்களுக்காக குரல் கொடுத்த ஸ்வீடன் போராளி!
![](https://thambattam.com/storage/2020/08/Greta-Thunberg-780x450.jpg)
கொரோனா வைரஸைக் கருத்தில் கொண்டு இந்தியாவில் நீட் மற்றும் ஜே.இ.இ தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என்றும், கொரோனா போன்ற கொடிய தொற்றுநோய் பரவலின் போது மாணவர்களை தேர்வு எழுத கட்டாயப்படுத்துவது சிறிதும் நியாயமற்றது என்று ஸ்வீடன் நாட்டு இளம் போராளியான கிரெட்டா தன்பெர்க் கூறியுள்ளார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, திமுக தலைவர் ஸ்டாலின் உட்பட நாடு முழுவதும் பல அரசியல் தலைவர்கள் மற்றும் மாணவர்கள், கொரோனா பரவல் கட்டுக்குள் வரும் வரை தேர்வை ஒத்திவைக்குமாறு மத்திய அரசிடம் வலியுறுத்தி வருகின்றனர்.
![](https://thambattam.com/storage/2020/08/sadasf-300x117.jpg)
இந்நிலையில், பருவ நிலை மாற்றம் குறித்து உலகளவில் தனது போராட்டத்தால் கவனம் ஈர்த்த ஸ்வீடன் நாட்டு இளம் போராளியான கிரெட்டா தன்பெர்க் (17), இந்தியாவில் நடத்தப்பட உள்ள தேசிய அளவிலான தேர்வுகளை ஒத்தி வைக்குமாறு தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அவர், “கொடிய நோயான கொரோனா தொற்றுநோய் பரவல் காலத்தில் இந்திய மாணவர்களை தேசியத் தேர்வுகளான JEE, NEET போன்ற தேர்வுகளில் கலந்து கொள்ளுமாறு கட்டாயப்படுத்துவது மிகவும் நியாயமற்றது, அதே நேரத்தில் மில்லியன்கணக்கான மக்களும் கடுமையான வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே ‘#PostponeJEE_NEETinCOVID’ என்ற அவர்களின் இணைய வழி போராட்டத்தில் நானும் நிற்கிறேன்.” என்று அவர் தனது ட்வீட்டில் தெரிவித்துள்ளார்.
ஜே.இ.இ(JEE) தேர்வு செப்டம்பர் 1ம் தேதி முதல் 6ம் தேதி வரையும், நீட் தேர்வு வரும் செப்டம்பர் 13ம் தேதி அன்றும் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.