“நெல்லை மாவட்ட மக்கள் விவசாயம் செய்வதற்கான நீராதாரத்தை நிச்சயம் உருவாக்கி தருவேன்.” – தமிழக முதல்வர் பழனிசாமி பேச்சு!

மதுரை மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களுக்கு நேற்று சென்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி பல கோடி ரூபாய் மதிப்பிலான புதிய வளர்ச்சி திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். அதே போல அம்மாவட்டங்களின் கொரோனா தடுப்பு பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.
அதனைத்தொடர்ந்து இன்று காலை நெல்லை மாவட்டத்துக்கு சென்ற முதல்வர் நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களின் கொரோனா வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து முதல்வர் ஆய்வு செய்தார். நெல்லையில் ரூ.196.75 கோடியில் முடிந்த வளர்ச்சி திட்டப்பணிகளை திறந்து வைத்து புதிய திட்டங்களையும் தென்காசி மாவட்டத்துக்கான ரூ.78.77 கோடி திட்டங்களையும் தொடக்கி வைத்தார்.
அதன் பின்னர் தென்காசி மற்றும் நெல்லை மாவட்ட விவசாயிகள், தொழில்முனைவோர், மகளிர் சுய உதவிக்குழுக்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். இந்த நிலையில் தற்போது நெல்லையில் முதல்வர் பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்து வருகிறார்.

அப்போது பேசிய அவர், “நானும் ஒரு விவசாயி, இன்றுவரை எனது ஊரில் விவசாயம் செய்து வருகிறேன். நெல்லை, தென்காசி மாவட்ட மக்கள் தடையின்றி விவசாயம் செய்வதற்கான நீராதாரத்தை நிச்சயமாக உருவாக்கி தருவேன். விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோரின் கோரிக்கைகள் பரிசீலனை செய்யப்படும்.
கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்கள் பிளாஸ்மா தானம் செய்ய முன்வர வேண்டும். நெல்லையில் ரூ.1,000 கோடி மதிப்பில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பணிகள் நடைபெற்று வருவதாகவும் மருத்துவக் கல்லூரிகளில் கூடுதலாக 100 மாணவர்கள் படிக்கும் வகையில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் நெல்லை மாவட்டத்தில் திசையன்விளை தாலுகா உருவாக்கப்பட உள்ளது” எனவும் கூறினார்.