கட்டாயமாக்கப்படும் ஹால்மார்க் முத்திரை; அவகாசம் கோரும் தங்க விற்பனையாளர்கள்

தங்க நகைகளுக்கு, ஹால்மார்க் முத்திரையை கட்டாயமாக்கி இருக்கும் மத்திய அரசின் நடவடிக்கையை, தங்க நகை விற்பனையாளர்கள் வரவேற்றிருப்பினும், ஹால்மார்க் முத்திரைக்கான கெடுவை, மேலும் நீட்டிக்க வேண்டும் என, கோரிக்கை வைத்திருக்கின்றனர்.
கொரோனா வைரஸ் தொற்று பரவலை கருத்தில் கொண்டு, ஹால்மார்க் முத்திரைக்கான காலக்கெடுவை, அடுத்த ஆண்டு, ஜனவரி, 15ம் தேதி என்பதிலிருந்து, ஜூன், 1ம் தேதி வரையாக நீட்டித்து, அரசு அறிவித்துள்ளது. இருப்பினும், தங்க நகை விற்பனையாளர்கள், இன்னும் அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என, தெரிவித்துள்ளனர்.
இது குறித்து, அகில இந்திய நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் உள்நாட்டு கவுன்சிலின் தலைவர் அனந்த பத்மநாபன் கூறியுள்ளதாவது: வரும் செப்டம்பர் மாதத்திற்குள்ளாக, எங்களிடமிருக்கும் பொருட்களில், 70 – 80 சதவீதத்தை, ஹால்மார்க் முத்திரையுடன் கூடியதாக மாற்றிவிட முடியும் எனக் கருதுகிறோம்.
இருப்பினும், விற்பனை மிகவும் மந்தமாக இருப்பதால், எங்களது எல்லா இருப்புகளையும் மாற்றுவதற்கு, கூடுதல் அவகாசம் தேவை. எனவே அவகாசத்தை, 2022ம் ஆண்டு ஜனவரி வரை நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன், அரசை அணுக இருக்கிறோம்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.