அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரத்தில் மீண்டும் இந்தியாவை தாக்கிய டொனால்ட் டிரம்ப்!

உலகில் காற்று மாசு அடைய இந்தியா, சீனா, ரஷ்யா ஆகிய நாடுகள் தான் காரணம் என்று அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரத்தில் டொனால்ட் டிரம்ப் மீண்டும் இந்தியாவை தாக்கி பேசியுள்ளார்.

அமெரிக்காவில் வரும் நவம்பர் 3ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஜனநாயகக் கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன் போட்டியிடுகிறார். தற்போது இருவரும் தீவிரப் பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர். வடக்கு கரோலினா மாகாணத்தில் டொனால்டு டிரம்ப் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அங்கு பிரசாரத்தில் பேசிய டிரம்ப், “அமெரிக்க வரலாற்றிலேயே மிக மோசமான அதிபர் வேட்பாளர் ஜோ பிடன்தான். தேர்தலில் அவரை நான் சந்திக்க வேண்டியுள்ளது. நான் வெற்றியை இழந்தால் அது மிகவும் கவலையான விஷயம்தான். ஆனால், இப்படியொரு மோசமான வேட்பாளரிடம் யார் தோற்க முடியும்? எனவே, எனக்குக் கவலை இல்லை. நான் அறிவார்ந்த மக்களுக்குத் தலைமை தாங்கி வருகிறேன். மக்களின் தேர்வு எளிதான ஒன்று.

ஜே பிடன் வெற்றி பெற்றால், அது சீனா வெற்றி பெற்றதாகி விடும். நான் வெற்றி பெற்றால் அது வடக்கு கரோலினா வெற்றி, அமெரிக்காவின் வெற்றி. ஜோ பிடன் ஊழல் அரசியல்வாதி. அவரது மகன் ஹன்டர், சீன தொழிலதிபருடன் 10 மில்லியன் டாலர் அளவுக்கு ஒப்பந்தம் வைத்திருக்கிறார். ஜோ பிடன் வெற்றி பெற்றால் அமெரிக்கர்களின் வேலைவாய்ப்புகளைச் சீனா திருடிக் கொள்ளும். ஜோ பிடனை மக்கள் ஒதுக்கித் தள்ள வேண்டும்.

மக்களே நான் உங்களுக்கு ஒன்று சொல்கிறேன். உலக அளவில் காற்று மாசு அடைய இந்தியா, சீனா, ரஷ்யா ஆகிய நாடுகள்தான் காரணம். காற்றில் அதிகமான மாசு இந்த நாடுகளே வெளியிடுகின்றன. அமெரிக்காவைப் பொறுத்தவரையில் குறைந்த அளவு மாசு தான் காற்றில் கலக்கிறது. சுற்றுச் சுழல் பாதுகாப்பில் தன்னிறைவாக அமெரிக்கா உள்ளது.

அமெரிக்காவில் வேலை அமெரிக்க மக்களுக்கே வழங்கப்பட வேண்டும். டென்னஸி நகரில் ஒரு நிறுவனத்தின் தலைவர் அமெரிக்கப் பணியாளர்களை மாற்றி வெளிநாட்டினரை வேலைக்கு அமர்த்தினார். அந்நிறுவனத்திற்கு நான் விடுத்த எச்சரிக்கைக்குப் பின், மீண்டும் அமெரிக்க மக்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x