‘கார்னிகா’ கப்பல் போக்குவரத்து இந்தியா- துபாய் இடையே நிரந்தரமாக நிறுத்தம்!!

இந்தியாவின் மும்பை நகரத்தை தாயகமாக கொண்ட கப்பல் ‘கர்னிகா’ ஆகும். ‘ஜலீஷ்’ என்ற கப்பல் நிறுவனம் இதனை தயாரித்துள்ளது. இந்த நிறுவனத்தின் மூலம் கடந்த 2019-ம் ஆண்டு மார்ச் மாதம் தயாரிக்கப்பட்ட புதிய சொகுசு கப்பல் இதுவாகும். இந்த கப்பல் மொத்தம் 11 அடுக்குகளை கொண்டது. இதில் அனைத்து தளங்களையும் பயணிகள் பயன்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதில் அதிகபட்சமாக 2 ஆயிரத்து 14 பயணிகள் ஒரே நேரத்தில் பயணம் செய்ய முடியும். இந்த கப்பலில் மொத்தம் 621 பணியாளர்கள் மற்றும் ஊழியர்கள் பணியாற்றி வந்தனர். ‘கார்னிகா’ சொகுசு கப்பல் 70 ஆயிரத்து 285 டன் எடையை இழுத்து செல்லும் திறன் வாய்ந்தது.
அதேபோல் கடல் தண்ணீரில் மணிக்கு 41.7 கி.மீ வேகத்தில் இந்த கப்பலால் பயணம் செய்ய முடியும். இதன் நீளம் 804 அடி, அகலம் 105 அடி ஆகும். இதன் உள்ளே பிரமாண்டமான நட்சத்திர ஓட்டலை போன்று அனைத்து வசதிகளுடன் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த கப்பலானது கடந்த 2019-ம் ஆண்டில் மே மாதம் மஸ்கட்டில் சுல்தான் காபூஸ் துறைமுகத்திற்கு வந்தது. அதனை தொடர்ந்து அதே மாதத்தில் துபாய்க்கு இந்த கப்பல் வருகை தந்தது. ‘கார்னிகா’ சொகுசு கப்பலானது கடந்த ஆண்டில் செப்டம்பர் மாதம் வரை துபாய் துறைமுகத்தை தலைமையிடமாக கொண்டு அபுதாபி, பஹ்ரைன், மஸ்கட் மற்றும் கசாப் ஆகிய பகுதிகளுக்கு வெள்ளிக்கிழமை மற்றும் திங்கட்கிழமைகளில் இயக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது கொரோனா தொற்று பரவல் காரணமாக துறைமுகங்கள் மூடப்பட்டுள்ளது. பல நாடுகளின் துறைமுகங்கள் திறப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதில் அந்த கப்பல் நிறுவனத்திற்கு ஏற்பட்ட கடன் நெருக்கடி காரணமாக அந்த கப்பலானது இங்கிலாந்து நிறுவனத்திடம் விற்கப்பட்டதாக சர்வதேச கப்பல் மற்றும் துறைமுக செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால் இந்தியா- துபாய் இடையே ‘கார்னிகா’ கப்பல் போக்குவரத்து நிரந்தரமாக நிறுத்தப்படுகிறது