தமிழகத்தில் நிலவுகின்ற நீட் எதிர்ப்பை நடிகர் சூர்யாவின் அறிக்கை இன்னும் கூர்மைப்படுத்தி அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்றிருக்கிறது. நீட்டை(NEET) எதிர்ப்போரை எல்லாம் நீட்டாக(NEAT)எதிர்கொள்வோமென வாய்துடுக்குகளுக்கு பெயர் போன பாஜக தலைவர் ஒருவர் எச்சரித்திருக்கிறார். நீட்டை கண்மூடித்தனமாக ஆதரிக்கும் பாஜக – ஆர்.எஸ்.எஸ் பிரமுகர்களும் & பல உயர் சாதி அறிவுஜீவிகளும் முன்வைக்கும் முக்கிய கருத்து, நீட் நுழைவுத்தேர்வால் மருத்துவக் கல்வித் தரம் மேம்படும் மற்றும் தகுதியுள்ள மாணவர்கள் மட்டுமே மருத்துவக் கல்வியை பயில்வர் என்பதே.

நீட் என்பது கட்சி சார்ந்த அரசியல் பிரச்னை என்றால் அதை அரசியல் தலைவர்களிடம் விட்டுவிட்டு பார்வையாளராக மட்டும் இருந்து விடலாம். ஆனால் நீட் நுழைவுத்தேர்வு எளிய சமூகங்களின் மருத்துவக்கனவை ஆபரேஷன் இல்லாமல் அகற்றும் அநீதி தேர்வு என்பதால், மாணவர்களின் நலனில் அக்கறை செலுத்தும் அனைவரும் அவற்றை மிக கடுமையாக எதிர்த்து போராட வேண்டிய தேவை இருக்கிறது. நீட்டிற்கு எதிராக தமிழகத்தின் பெரும்பாலான சமூக ஆர்வலர்களும் கல்வியியலாளர்களும் தொடர்ந்து தங்களது கருத்துக்களை முன்வைத்துக் கொண்டிருக்கின்றனர். நீட் தேர்விற்கு ஆதரவு – எதிர்ப்பு என இரண்டு தரப்பில் எவர் சொல்வது உண்மை என்பதை கிடைக்கின்ற தரவுகளின் வழியே ஆய்ந்தறிந்து தெளிவதே சான்றோர்க்கு அழகு. இருபக்க தரவுகளையும் திறந்த மனதுடன், நேர்மையான முறையில் உள்வாங்கி ஆய்ந்தறிவதும், பிறகு உண்மை எங்கிருக்கிறதோ அங்கே தன்னை இணைத்து கொள்வதுமே நடுநிலை என்பதாகும்.
நீட் தேர்வினால் மருத்துவ தரம் உயரும்?
நீட் என்பது ஒரு நுழைவு தேர்வு மட்டுமே. நீட்டில் வெற்றி பெறுவோரெல்லாம் மருத்துவராக முடியாது. மருத்துவராக வேண்டுமெனில் அதற்கென மருத்துவக்கல்லூரிகளில் தனித்தேர்வுகள் உண்டு. அதை எழுதி வெற்றி பெறுவோரே மருத்துவராக முடியும். இந்த அடிப்படையில் பார்த்தால் நீட் தேர்ச்சியினாலோ அல்லது +2 மதிப்பெண் அடிப்படையில் நேரடியாக மருத்துவப்படிப்பில் சேர்ந்தாலும், மருத்துவ அடிப்படை தேர்வுகளில் வெற்றி பெறுவோர் மட்டுமே மருத்துவராக முடியும். இதில் நீட் நுழைவு தேர்வு எந்த வகையில் மருத்துவத்தின் தரத்தை உயர்த்தும்? நீட்டிற்காக நீட்டி முழக்கி பேசுகின்ற உயர்வர்க்க அறிவுஜீவிகள் இதற்கு விளக்கம் தர வேண்டும்.
நீட் மட்டுமே மருத்துவத்திற்கான தகுதி தேர்வா?
நீட் தகுதி தேர்வென்றால் +2வில் எடுக்கும் மதிப்பெண் தகுதி இல்லையா? நீட் தேர்வில் 180 கேள்விகளுக்கு 180 நிமிடங்களில் பதிலளிக்க வேண்டும். ஒரு கேள்விக்கு ஒரு நிமிடம் என்ற காலவிகிதத்தில் நீட் தேர்வு கட்டமைக்கப்பட்டிருக்கிறது. இலகுவான, மிதமான, கடினமான & மிக கடினமான என நான்கு வகைகளும் உள்ளடக்கிய கேள்விகள். சரியான பதிலுக்கு 4 மதிப்பெண்களும் தவறான பதிலுக்கு -1 மதிப்பெண்ணும் கொடுக்கப்படும். நீட் தேர்வில் தேர்ச்சி பெறும் சூட்சுமம் என்பது இலகுவான மற்றும் மிதமான கேள்விகளை மிக விரைவில் கண்டறிந்து பதில் எழுதுவதும், கடினம் & மிக கடின வகை கேள்விகளை எளிதில் கண்டறிந்து அவற்றை கடந்து செல்வதே. ஏனெனில் 180 நிமிடங்களில் தேர்ச்சி பெறுவதற்கான கேள்விகளை கண்டடைந்து பதில்களை விரைவாக எழுத வேண்டும். இது எவ்வாறு மருத்துவம் படிக்க அடிப்படைத் தகுதி தேர்வாக இருக்க முடியும்?
நீட் ஒரு மனுநீதி தேர்வு :
நீட்டிற்கு எதிரான அறிக்கையில் நடிகர் சூர்யா “இது ஒரு மனுநீதி தேர்வு” என்ற கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறார். அவரின் கூற்று யதார்த்தத்தை பிரதிபலிக்கிறதா அல்லது மிகைப்படுத்தப்பட்ட உணர்ச்சிகளின் பிரதிபலிப்பா என்பதை கீழே வைக்கப்படும் தரவுகளின் வழியே உறுதி செய்து கொள்ளுங்கள். நீட்டிற்கு முன்னரான மருத்துவ கல்வி சேர்க்கையை எடுத்துக் கொண்டால் இடஒதுக்கீட்டில் வராத 31 சதவிகித இடங்களில் (தமிழகத்தில் 69 சதவிகித இடங்கள் இடஒதுக்கீட்டிற்குரியவை என்பதை நினைவில் கொள்க) பெரும்பாலான இடங்களை அதிக மதிப்பெண்கள் எடுத்த அடிப்படையில் பிற்படுத்தப்பட்ட , மிக பிற்படுத்தப்பட்ட & பட்டியல் சாதி மாணவர்கள் நிரப்பி வந்தனர். ஆனால் நீட் நுழைவுத்தேர்வு வந்த பின்னர் நூற்றாண்டுகளுக்கு முன்னர் இருந்தது போன்ற தலைகீழ் மாற்றம் நிகழ்ந்திருக்கிறது.முன்னேறிய சாதியினர் 245 இடங்களை கூடுதலாக பெற்றிருக்கின்றனர். பிற்படுத்தப்பட்டவர்கள் ( BC) 280 இடங்களை இழந்திருக்கினறனர். மிக பிற்படுத்தப்பட்டவர்கள் ( MBC) 39 இடங்களையும், பட்டியலினத்தவர் ( SC) 15 இடங்களையும் இழந்திருக்கின்றனர். தமிழகத்தின் சமூகநீதியை சிதைக்கின்ற நீட் மனுநீதி தேர்வு என்ற அடைமொழிக்கு முற்றிலும் பொருத்தமான ஒன்றே.

மருத்துவராவது பணம் படைத்தவர்களுக்கு மட்டுமான உரிமையா?
நீட் நுழைவுத்தேர்வில் வெற்றி பெற்றோரில் மிக பெரும்பாலோர் நீட் கோச்சிங் சென்டர் சென்று இரண்டு வருடம், ஒரு வருடம் அல்லது குறைந்தபட்சம் ஒரு மாதமாவது நீட் கோச்சிங் செண்டரில் படித்தவர்களே. ஒரு மாதம் படிக்க ஆகும் செலவு ரூ 30 ஆயிரத்திற்கும் மேல். ஒரு வருடமென்றால் ஒரு லட்சத்து 30 ஆயிரத்திற்கும், இரண்டு வருடமென்றால் 3 லட்சத்திற்கும் மேலும் செலவழித்து நீட் கோச்சிங் செண்டரில் படிப்பவர்கள் நுழைவுத்தேர்வில் வெற்றி பெற்று மருத்துவக்கல்லூரிகளில் சேருகின்றனர்.
அரசு பள்ளிக்கூடங்களில் படித்து வருகின்ற எளிய சமூகங்களின் மாணவர்கள் இத்தகைய கோச்சிங் செண்டர்களில் சேருவது எளிதான காரியமல்ல. பள்ளிக்கூட கட்டணங்களை கூட கட்டமுடியாமல் தடுமாறும் எளிய சமூக மாணவர்களே அரசுப்பள்ளியில் பயில்பவர்கள். இவர்களிடம் நீட் கோச்சிங் செண்டர் சேர்ந்து படிக்க பணம் எங்கிருந்து வரும்? கடந்த ஆண்டு நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று மருத்துவக்கல்லூரிகளில் சேர்ந்தவர்களில் 1,834 பேர், பள்ளி படிப்பு முடித்து பின்பு ஓரிரு ஆண்டுகள் முழுக்க நீட் பயிற்சி எடுத்தவர்கள். இது தமிழகத்தில் உள்ள மொத்த மருத்துவ இடங்களில் சரிபாதியாகும். மருத்துவம் படிப்பதை இலக்காக கொண்டிருந்தாலும், கோச்சிங் வகுப்பிற்காக ஒன்றிரண்டு இலட்சங்களை செலவு செய்யும் பொருளாதார பின்புலம் இல்லாத அரசுப்பள்ளி மாணவர்கள் என்ன செய்வார்கள்?
2018-19 ம் கல்வியாண்டில் தமிழ்நாடு அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த 4 மாணவர்களுக்கும் , அரசு உதவிப் பெறும் பள்ளிகளைச் சேர்ந்த 3 மாணவர்களுக்குத்தான் அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்துள்ளது. தனியார் பள்ளி மாணவர்களில் 20 பேருக்குத்தான் அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்துள்ளது. ஆனால் CBSE பள்ளி மாணவர்களில் 611 பேருக்கும், தமிழக இருப்பிடச் சான்றிதழை கொடுத்து வெளிமாநிலங்களில் பள்ளி படிப்பை முடித்த 191 மாணவர்களுக்கும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்துள்ளது. தமிழகத்திலுள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசுப் பள்ளியைச் சேர்ந்த ஒரேயொரு மாணவருக்கும், தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 3 பேருக்கும் இடம் கிடைத்துள்ளது. ஆனால் CBSE பள்ளிகளைச் சேர்ந்த 283 பேருக்கு தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்துள்ளது. அரசு மற்றும் தனியார் மருத்துவக்கல்லூரிகளில் 8 அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே இடம் கிடைத்துள்ளது.

மாநில வழி பாடத்திட்டத்தில் தமிழ் வழியில் படித்த மாணவர்கள் எப்படி இந்த நீட் தேர்வை எழுதி தேர்ச்சி பெறுவார்கள்? CBSE பாடத்திட்டம் வழியே படித்து கூடுதலாக நீட் கோச்சிங் செண்டரில் பயிற்சியெடுத்த மாணவர்களுடன் எப்படி அரசு பள்ளிக்கூட மாணவர்கள் போட்டியிடுவர்? போட்டி என்பது சமநிலையில் இருக்க வேண்டும். ஆனால் நீட் தேர்வு சமநிலையற்ற போட்டியை உருவாக்கி , அரசு மற்றும் அரசு உதவி பெறுகின்ற பள்ளிக்கூட மாணவர்களை சவக்குழியை நோக்கி தள்ளுகிறது. அரசு பள்ளி மாணவர்களுக்கு கிடைக்க வேண்டிய மருத்துவ இடங்களை எல்லாம் CBSE பாடத்திட்டம் வழியே படித்த மாணவர்களுக்கு தாரை வார்க்கப்படுகிறது. தமிழக மாணவர்களின் இடங்களை, வெளிமாநில மாணவர்களுக்கு மடைமாற்றி விட்டிருக்கிறது நீட். இந்த வருடம் நீட் தேர்வுக்கு 17 விழுக்காடு தமிழக மாணவர்கள் குறைவாகவே பதிவு செய்திருப்பதை வெறும் செய்தி என கடந்து விடக்கூடாது என்பதை மேற்கண்ட புள்ளிவிவரங்கள் உறுதிப்படுத்துகின்றன.
நீட் விலக்கு – சிறப்பு சட்டம் :
தமிழக அரசிற்கு சொந்தமான MMC, ஸ்டான்லி உள்ளிட்ட 23 மருத்துவக்கல்லூரிகளின் மாணவர் சேர்க்கை உரிமையை நீட் தேர்வின் வழியே தமிழக அரசிடமிருந்து பறித்து விட்டது மத்திய பாஜக அரசு. இந்த 23 கல்லூரிகளின் சேர்க்கைக்கு மட்டுமே நீட் தேர்விலிருந்து விலக்கை கோருகிறது தமிழகம். தனியார் கல்லூரிகளின் மருத்துவ சேர்க்கைக்கு இந்த விலக்கை கேட்கவில்லை. இந்த 23 கல்லூரிகளும் தமிழக அரசின் நிதியை வைத்து சிறந்த கட்டமைப்புகளை உருவாக்கி வைத்திருப்பவை. அந்த கட்டமைப்பு தமிழக மாணவர்களுக்கு பயன்தரும் வகையிலேயே இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவது தேசத்துரோக குற்றமல்லவே. மேலும் தனியார் கல்லூரிகளில் இடம் கிடைத்தாலும் அரசுப்பள்ளி மாணவர்கள் அங்கே சென்று படிப்பது அரிதிலும் அரிது. ஏனெனில் தனியார் கல்லூரிகளின் கட்டணத்தை கட்டக்கூடிய வசதி கிராமப்புற & எளிய சமூகங்களின் மாணவர்களுக்கு வாய்ப்பதில்லை. 30 ஆயிரம் கொடுத்து கோச்சிங் செல்ல வசதியில்லாத எம் மாணவர்கள் லட்சக்கணக்கில் கட்டணம் வசூலிக்கும் தனியார் & நிகர்நிலை மருத்துவ பல்கலைக்கழகங்களில் எவ்வாறு படிக்க முடியும்? இதற்கான தீர்வு நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு நிரந்தர விலக்கு பெறுவது மட்டுமே.

நீட் ஏற்படுத்தும் பக்கவிளைவுகள் :
மற்ற மாநிலங்களை ஒப்பிடும் போது, சுகாதாரத்துறையில் சிறந்த கட்டமைப்பை வைத்திருக்கும் மாநிலம் தமிழ்நாடு. பெரும்பாலான குக்கிராமங்களுக்கும் மருத்துவ வசதியை ஓரளவிற்கேனும் கொடுத்து கொண்டிருக்கிறது. மருத்துவப்பட்ட மேற்படிப்பு படிக்கும் மருத்துவர்கள் குறிப்பிட்ட ஆண்டுக்காலம் அரசு மருத்துவராக பணிபுரிய வேண்டும் என்ற விதியை தமிழக அரசு வைத்திருப்பதால், பல மருத்துவர்கள் கிராமங்களில் பணிபுரிகின்றனர். ஆனால் மருத்துவ மேற்படிப்பிற்கும் நீட் தேர்வை கொண்டு வந்து விட்டதால், தமிழக அரசின் விதி தளர்ந்து போகும் ஆபத்து உண்டு. அது கிராமங்களின் சுகாதார மேம்பாட்டில் கடுமையான பின்விளைவுகளை ஏற்படுத்தும்.
நீட் தேர்வெழுதாமல் மருத்துவரானவர்கள் தகுதியற்றவர்களா?
நாட்டிலேயே மருத்துவ தலைநகரம் எதுவென்று கேட்டால் “சென்னை” மாநகரம் என்ற பதில் சட்டென பலரும் சொல்வர். மத்திய கிழக்கு மற்றும் தெற்காசிய நாடுகளில் இருந்து மருத்துவ சிகிச்சைக்கு சென்னையை நோக்கி பல வெளிநாட்டவர் வருகின்றனர். நீட் போன்ற தேர்வெழுதாத பெரும்பாலான மருத்துவர்களை கொண்டு தான் இத்தகைய உயர்தர சிகிச்சை கொடுக்கும் மருத்துவமனைகள் இயங்குகின்றன. தமிழகம் தரமற்ற மருத்துவர்களை உருவாக்கியது, ஆகையால் நீட் நுழைவுத்தேர்வு என்ற வாதம் உண்மை என்றால் இந்தியாவிலேயே சிறந்த மருத்துவ நகரமாக தமிழ்நாட்டின் தலைநகர் சென்னை எப்படி விளங்க முடியும்? மேலும் இதே நீட் தேர்வெழுதாத மருத்துவர்களின் அளப்பரிய சேவையினாலேயே இந்தியாவிலேயே குழந்தைகள் இறப்பு விகிதம் குறைவாக உள்ள மாநிலங்களில் தமிழகமும் ஒன்றாக இருக்கிறது. தமிழகத்தின் குழந்தைகள் இறப்பு விகிதம் 15. ஆனால் தேசத்தின் மொத்த குழந்தைகள் இறப்பு விகிதம் 33. அதாவது இந்திய தேசத்தை விட நூறு மடங்கிற்கு மேல் சுகாதாரத்துறையில் சிறப்பாக இருக்கிறது தமிழ்நாடு. தரமற்ற மருத்துவர்களால் இது சாத்தியப்படுமா என்பதை நீட் தேர்வை ஆதரிப்போர் சிந்தித்து பார்க்க வேண்டும்.
காசும் காணியும் பறிபோகலாம், கல்வி கற்றால் பறித்துக் கொள்ள முடியாது என்று நம்பி தமிழகத்தின் பல கடைநிலை சமூக மாணவர்கள் கல்வியை தங்களது ஆயுதமாக பயன்படுத்தி வந்த நிலையில் அந்த கல்வி கற்கும் உரிமையை காவு கேட்கிறது நீட் நுழைவுத்தேர்வு. ஏகலைவனிடம் கட்டைவிரலை கேட்ட துரோணர்களை விட கொடுமையானவர்கள் எளியவர்களின் கல்வி உரிமையை பறிப்பவர்கள். ஒரு நூற்றாண்டிற்கு முன்னர் மருத்துவம் பயில சமஸ்கிருதம் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டுமென்று இருந்ததை, சமூக நீதியின் மீது அக்கறை கொண்டிருந்த அன்றைய சென்னை மாகாண முதன்மை அமைச்சர் பனகல் அரசர் சட்டம் கொண்டு வந்து நீக்கினார். நூறாண்டு கடந்த பின்னரும் தங்களது இருப்பை நிலைநாட்ட ஆதிக்கவாதிகள், எளிய சமூகங்களை படிக்க விடாமல் வேறொரு வகையில் தடுப்பரணை ஏற்படுத்துகின்றனர். நீறு பூத்த நெருப்பாக நீட் எதிர்ப்பு தமிழகத்தில் மாறிக் கொண்டிருக்கிறது. ஜல்லிக்கட்டு போராட்டம் போல பெருந்திரள் மக்கள் இயக்கமாய் நீட் எதிர்ப்பு போராட்டம் உருமாறும். அன்று தடுப்பரண்கள் அழுத்தம் தாங்காமல் சரிந்து விழும்