“இந்த ஆண்டு டிரைலர் தான், அடுத்த வருஷம் தான் மெயின் பிக்சர் இருக்கு” கடும் எச்சரிக்கை விடுத்த உலக உணவு அமைப்பு!
இந்த ஆண்டைவிட அடுத்த ஆண்டு உணவுப் பஞ்சம் அதிகரிக்கும் என்று ஐ.நா உணவு நிவாரணப் பிரிவான “உலக உணவு அமைப்பு” எச்சரிக்கை விடுத்துள்ளது.
போர் மற்றும் நெருக்கடியான சூழல்களில் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு உணவளிக்க மேற்கொண்ட முயற்சிகளைப் பாராட்டும் வகையில், உலக உணவு அமைப்பிற்கு இந்த ஆண்டு நோபல் பரிசு வழங்கப்பட்டது.
இந்நிலையில், இந்த அமைப்பு தற்போது ஒரு மிகப்பெரிய எச்சரிக்கையைக் கொடுத்துள்ளது. உலக உணவு அமைப்பின் தலைவர், டேவிட் பியஸ்லி கூறுகையில் “கொரோனா தொற்று பரவலால் உலகில் பல பகுதிகளில், உணவுப் பஞ்சம் அதிகரிக்கும் என்று நான் எச்சரித்திருந்தேன். அந்த எச்சரிக்கையை ஏற்று உலக தலைவர்கள் பல்வேறு உதவிகளை அளித்தனர். நிதியுதவி, ஊக்கத் திட்டங்கள், கடன் வசூல் நிறுத்திவைப்பு போன்ற சலுகைகளை அவர்கள் அளித்தனர். எனவே இந்த ஆண்டு உணவுப் பஞ்சத்தால், மக்கள் பாதிக்கப்படாமல் தவிர்க்கப்பட்டது.
ஆனால், தற்போது மீண்டும் கொரோனா நோய்த்தொற்று பரவி தீவிரமடைந்து வருகிறது. பல நாடுகள் மீண்டும் பொது முடக்கங்களை அறிவித்து வருகின்றன. நாடுகளின் பொருளாதாரத்தை கொரோனா நெருக்கடி தொடர்ந்து பாழ்படுத்தி வருகிறது. இந்தச் சூழலில், 2020-ம் ஆண்டு எங்களுக்குக் கிடைத்த அதே நிதியுதவி அடுத்த ஆண்டு கிடைக்காமல் போகும். இதன் காரணமாக இந்த ஆண்டைவிட அடுத்த ஆண்டு உணவுப் பஞ்சம் மிகவும் மோசமாக இருக்கும்.
உலக நாடுகளின் தலைவர்கள் உரிய நிதியுதவியை வழங்காவிட்டால், இந்தச் சூழலைத் தவிர்க்க முடியாது. இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு எங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது, உணவுப் பஞ்சத்தைத் தணிக்கும் எங்களது முயற்சிகளுக்குச் சாதகமான சூழல் ஏற்பட்டுள்ளது.
கொரோனா நெருக்கடியால் உலக எதிர்நோக்கியுள்ள உணவுப் பஞ்சம் குறித்து உலகத் தலைவர்களை எச்சரிக்க, இந்த நோபல் பரிசு எங்களுக்குப் பக்கபலமாக இருக்கிறது. இதற்கு முன்னர் வரை எங்களுடன் பேச 15 நிமிடங்கள் மட்டுமே ஒதுக்கிய தலைவர்கள், தற்போது 45 நிமிடங்கள் ஒதுக்குகின்றனர். நோபல் பரிசு பெற்ற எங்களது கருத்துகளைக் கேட்க அவர்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.” என்றார்.