தானாக விலகாவிட்டால் பதவி பறிப்பு தீர்மானம்: டிரம்ப்புக்கு சபாநாயகர் எச்சரிக்கை!!
டிரம்ப் பதவி விலகாவிட்டால், நாடாளுமன்றத்தில் அவர் மீது பதவி நீக்க தீர்மானம் கொண்டு வரப்படும்”, என்று சபாநாயகர் நான்சி பெலோசி எச்சரித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடெனின் வெற்றியை அங்கீகரிக்க, கடந்த புதன்கிழமை அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக் கூட்டம் நடந்தது. அப்போது, நாடாளுமன்ற கட்டிடத்தை முற்றுகையிட்டு அதிபர் டிரம்ப்பின் ஆதரவாளர்கள் நடத்திய போராட்டத்தில் பெரும் வன்முறை வெடித்தது. இதில், 5 பேர் கொல்லப்பட்டனர். இந்த மோதலுக்கு டிரம்ப்தான் காரணம் என்பதால், அவர் மீது அமெரிக்க மக்கள் கோபத்தில் உள்ளனர்.
அவருடைய பதவி முடிய இன்னும் 9 நாட்களே உள்ள நிலையில், அவர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. ஜனநாயக கட்சியும் அவரது பதவியை பறிக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில், நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபை சபாநாயகர் நான்சி பெலோசி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘டிரம்ப் தானாகவே பதவி விலக வேண்டும் என எம்பி.க்கள் எதிர்பார்க்கின்றனர். அப்படி அவர் பதவி விலகவில்லை என்றால், 25வது சட்ட திருத்தத்தின்படி அவர் மீது பதவி நீக்க தீர்மானம் கொண்டு வந்து, பதவி பறிக்கப்படும்’, என்று கூறியுள்ளார்.
டிரம்ப் ஆதரவாளர்கள் நடத்திய வன்முறையாலும், அதை தூண்டி விட்டதாகவும் டிரம்பின் டிவிட்டர் கணக்குகள் நேற்று முன்தினம் தற்காலிகமாக முடக்கப்பட்டன. இந்நிலையில், டிரம்பின் செய்திகள், பேச்சுகள் வன்முறையை தூண்டும் வகையில் இருப்பதால், அவருடைய கணக்குகள் நிரந்தரமாக முடக்கப்படுவதாக அந்நிறுவனம் நேற்று அறிவித்தது குறிப்பிடத்தக்கது.