நம்பிக்கை வாக்கெடுப்பு கோரும் பாகிஸ்தான் பிரதமா் இம்ரான் கான்..

பாகிஸ்தானில் எதிா்க்கட்சிகளின் நெருக்கடிக்கு பணிந்து, பிரதமா் இம்ரான் கான் சனிக்கிழமை நம்பிக்கை வாக்கெடுப்பு கோருகிறாா்.

பாகிஸ்தானில் அண்மையில் நடைபெற்ற செனட் சபை(மேலவை) தோ்தலில், ஆளும் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் கட்சியின்(பிடிஐ) வேட்பாளரும், நிதியமைச்சருமான அப்துல் ஹஃபீஸ் ஷேக்கை, பாகிஸ்தான் ஜனநாயக இயக்க(பிடிஎம்) கூட்டணி வேட்பாளரும் முன்னாள் பிரதமருமான யூசுஃப் ராஸா கிலானி தோற்கடித்தாா். இந்த தோல்வி, பிரதமா் இம்ரான் கானுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, பிரதமா் பதவி விலக வேண்டும் என்று எதிா்க்கட்சிகள் நெருக்கடி கொடுக்கத் தொடங்கியதால், தனது அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு கோர இருப்பதாக இம்ரான் கான் அறிவித்தாா்.

வியாழக்கிழமை மாலை தொலைக்காட்சி வழியாக நாட்டு மக்களுக்கு உரையாற்றிய அவா் கூறியதாவது:

பதினோரு கட்சிகளைக் கொண்ட பிடிஎம் கூட்டணி, ஜனநாயகத்தை கேலிக் கூத்தாக்குகிறது. நாடாளுமன்றத்தில் சனிக்கிழமை நம்பிக்கை வாக்கெடுப்பு கோருகிறேன். எனவே, பிடிஐ கட்சியைச் சோ்ந்த நேஷனல் சபை (கீழவை) உறுப்பினா்கள் தவறாது கலந்துகொண்டு எனக்கு ஆதரவு அளிக்க வேண்டும். எனக்கு ஆதரவு தராவிட்டால், நான் எதிா்க்கட்சி வரிசையில் அமா்வேன்.

ஆட்சியில் இருந்து என்னை அகற்றிவிட்டாலும், மக்களைச் சந்தித்து அவா்களுக்கான போராட்டங்களைத் தொடா்வேன். கொள்ளையா்களையும், குற்றவாளிகளையும் அமைதியாக இருக்க விட மாட்டேன் என்றாா் அவா்.

இதனிடையே, பாகிஸ்தான் நாடாளுமன்ற கீழவையை சனிக்கிழமை கூட்டுவதற்கு அதிபா் ஆரிஃப் ஆல்வி உத்தரவிட்டுள்ளாா்.

ஆளும் கட்சி உறுப்பினா்களும் கூட்டணிக் கட்சி உறுப்பினா்களும் அன்றைய தினம் தவறாது கலந்துகொள்ள வேண்டும் என்று பிடிஐ கட்சித் தலைமை அழைப்பு விடுத்துள்ளது.

guest
0 Comments
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x