ரேஷன் அட்டை தாரர்களுக்கு இலவச முக கவச திட்டம் தொடங்கி வைத்தார் முதல்வர்…

தமிழகத்தில், கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது, நாட்டிலேயே கொரோனா மகாராஷ்டிராவிற்கு அடுத்த படியாக தமிழ்நாட்டில் தான் கொரோனா தொற்றின் வேகம் அதிகமாக உள்ளது. கொரோனா நோயை கட்டுப்படுத்த மக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயமாகும் இதன் காரணமாக மக்களுக்கு முகக்கவசங்கள் இலவசமாக தமிழ்நாடு அரசு முடிவு செய்தது. கடந்த ஜூன் மாதம் 2-ந்தேதி பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் கட்டிடத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் துணியால் தயாரிக்கப்பட்ட மறுபயன்பாட்டுடன் கூடிய தலா 2 முககவசங்கள் வழங்க பரிசீலிக்கப்படுவதாக கூறினார்.
தமிழ்நாட்டில் 2 கோடியே 8 லட்சத்து 23 ஆயிரத்து 76 ரேஷன் அட்டைதாரர்கள் உள்ளனர். அதில் உள்ள குடும்ப அங்கத்தினர்களின் எண்ணிக்கையை கணக்கிடும்போது, 6 கோடியே 74 லட்சத்து 15 ஆயிரத்து 899 பேர் வருகின்றனர். இதில், ஒவ்வொருவருக்கும் தலா 2 முககவசங்கள் என்று கணக்கிட்டால், மொத்தம் 13 கோடியே 48 லட்சத்து 31 ஆயிரத்து 798 முகக்கவசங்கள் வழங்கப்படவேண்டும்.
எனவே, இந்த முககவசங்களை எவ்வளவு விலையில் கொள்முதல் செய்வது என்பதை மதிப்பிடுவதற்காக விலை நிர்ணயக் குழுவை அரசு அமைத்தது. அந்தக் குழுவின் தலைவராக வருவாய் நிர்வாக ஆணையர், பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருந்து இயக்குனர் உள்பட 6 பேர் இடம்பெற்றிருந்தனர்.
ரேசன் அட்டைதாரர்களுக்கு இலவச முககவசங்கள் வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று சென்னை தலைமைச்செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் தொடங்கி வைத்தார்.