தங்கக்கடத்தல் வழக்கு: ஸ்வப்னா சுரேஷ் ஜாமின் மனு தள்ளுபடி

கேரள தங்கக் கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் ஸ்வப்னா சுரேஷின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து, கொச்சி என்.ஐ.ஏ., சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் பெயரில், சரக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட 30 கிலோ தங்கக்கட்டிகளை, சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இந்த வழக்கை, என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பு விசாரித்து வருகிறது.
இந்த வழக்கில் தொடர்புடைய ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயர் உள்ளிட்ட நால்வர் மீது பயங்கரவாத செயல், சட்ட விரோத தடுப்பு செயல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் ஸ்வப்னா சுரேஷ், என்.ஐ.ஏ. சிறப்பு நீதிமன்றத்தில் ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்தார்.
தங்கக் கடத்தலில் ஈடுபட்டதற்கான வலுவான ஆதாரம் இருப்பதால், ஜாமின் வழங்க இயலாது எனத் தெரிவித்த நீதிமன்றம், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.