சசிகலா ஆகஸ்ட் 28-ம் தேதி ரிலீஸ்? தகிக்கும் தகவலால் தவிக்கும் அதிமுக!!

கர்நாடக சிறையில் இருக்கும் சசிகலா ஆகஸ்ட் 28-ம் தேதி விடுதலையாக இருக்கிறார்’ என்று டெல்லியைச் சேர்ந்த மூத்த பத்திரிகையாளர் ஒருவர் நேற்று தனது யூடியூப் சேனல் வழியேதெரிவித்துள்ளார். 

முன்னதாக, ‘சசிகலா ஆகஸ்ட் 14-ம் தேதி விடுதலையாவார்’ என்று பாஜகவைச் சேர்ந்த ஆசீர்வாதம் ஆச்சாரி ட்வீட் செய்திருந்தார். இந்த நிலையில் இப்போது, ஆகஸ்ட் 28-ம் தேதி சசிகலா விடுதலை நிச்சயம் எனத் தெரிவித்திருக்கும் டெல்லியின் அந்த மூத்த பத்திரிகையாளர், ‘சசிகலா விடுதலை தொடர்பாக கர்நாடக அரசிடமிருந்து ஆகஸ்ட் 16-ம் தேதி மதியம் இரண்டரை மணிக்கு இ-மெயில் தகவல் ஒன்று மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு வந்திருப்பதாக நம்பத்தகுந்த தகவல் ஒன்றும் எனக்குக் கிடைத்திருக்கிறது’ என்கிறார்.

இந்தத் தகவலின் உண்மைத்தன்மை குறித்து அறிய முன்பு சசிகலா விவகாரங்களைக் கவனித்து வந்த பெங்களூரு புகழேந்தியிடம் இது குறித்துக் கேட்ட போது, “சசிகலா 28-ம் தேதி விடுதலையாவார் எனச் சொல்லும் அந்த நபர் யார்… அவரென்ன மத்திய அரசின் பவர் ஏஜென்டா? எனக்குத் தெரிந்தவரை சசிகலா விடுதலையில் நிறையச் சிக்கல்கள் இருக்கின்றன. அவர் சிறை விதிகளை மீறி நடந்து கொண்டதாகப் புகார் எழுதிய சிறைத்துறை அதிகாரி ரூபா ஐபிஎஸ் தான் இப்போது கர்நாடக உள்துறைச் செயலாளர்.

அவர் எழுப்பிய குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகள் முடிந்து அதற்காக சசிகலாவுக்கு என்ன தண்டனை என்ற விவரம் இதுவரை தெரிவிக்கப்படவில்லை. சசிகலா செலுத்த வேண்டிய அபராதத் தொகையான 10 கோடி ரூபாயும் இன்னும் செலுத்தப்படவில்லை. இத்தனை சிக்கல்கள் இருக்கும் போது இன்னும் பத்து நாளில் அவர் எப்படி விடுதலையாக முடியும்?” என்று கேள்வி எழுப்பினார் அவர்.

சசிகலாவின் வழக்கறிஞரான ராஜா செந்தூர்பாண்டியனிடம் இதுகுறித்துக் கேட்டபோது, “சசிகலா விடுதலை தொடர்பாக கர்நாடக சிறைத் துறையிடமிருந்து எங்களுக்குத்தான் முதலில் தகவல் தெரிவிப்பார்கள். ஆனால், இதுவரை எங்களுக்கு எந்தவொரு தகவலும் வரவில்லை. வழக்கில் சசிகலா செலுத்த வேண்டிய அபராதத் தொகையை எல்லாம் தயார் செய்து வைத்திருக்கிறோம். என்றாலும் அதைச் செலுத்திய பிறகுதான் அடுத்தகட்ட நகர்வுகள் இருக்கும்.” என்றார்.

இது குறித்து சசிகலா வட்டாரத்தில் பேசியபோது. “சின்னம்மா விடுதலையை நாங்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். யார் அடுத்த முதல்வர் வேட்பாளர் என அதிமுகவில் தொடங்கி இருக்கும் அதிகார யுத்தத்தைத் தொடர்ந்து அதிமுகவினருக்கும் இப்போது கட்சி கலகலத்துவிடுமோ அச்சம் வந்து விட்டது. எனவே, அவர்களும் இப்போது சின்னம்மா விடுதலையை எதிர்நோக்க ஆரம்பித்துவிட்டார்கள்.” என்று கூறினர்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x