இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஏற்பட்டுள்ள மோசமான சரிவு இதுதான் – ஜப்பான் ஊடகங்கள்

கரோனா நோய்த்தொற்று காரணமாக நுகர்வு மற்றும் வர்த்தகம் குறைந்ததே இதற்கு காரணம் என அரசு வெளியிட்ட புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.அமைச்சரவை அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், ஜப்பானின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) இரண்டாவது காலாண்டில் 7.8 சதவீதம் சரிந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சரிவானது இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஏற்பட்டுள்ள மோசமான சரிவு என ஜப்பான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஆனால், ஒப்பிட்டுப் பார்க்கக்கூடிய புள்ளிவிவர தகவல்கள் 1980-இலிருந்து தான் உள்ளன என அரசு தெரிவித்துள்ளது. அந்த வகையில், முந்தைய மோசமான சரிவானது 2008}09}இல் சர்வதேச நிதி நெருக்கடியின்போது ஏற்பட்டது.பொருளாதார வலிமையில் உலகின் மூன்றாவது பெரிய நாடான ஜப்பானின் பொருளாதாரம், கடந்த ஆண்டு இறுதியில் கரோனா நோய்த்தொற்று பரவத் தொடங்கியபோதே மோசமாகத்தான் இருந்தது. கரோனா நோய்த்தொற்று மற்றும் சமூக இடைவெளி கட்டுப்பாடுகளால் இந்தச் சரிவு படிப்படியாக மோசமடைந்தது.ஏப்ரல்-ஜூன் காலகட்டத்தில் ஜப்பானின் ஏற்றுமதியானது ஆண்டு விகிதத்தில் 56 சதவீதம் குறைந்தது. அதேவேளையில் தனியார் நுகர்வானது ஆண்டு விகிதத்தில் கிட்டத்தட்ட 29 சதவீதம் குறைந்தது.ஜப்பானில் கரோனா தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட போதிலும், வணிக நடவடிக்கைகள் முழுமையாக நிறுத்தப்படவில்லை. இதனால் கடந்த மாதம் நோய்த்தொற்று அதிகரித்து மொத்த தொற்று எண்ணிக்கை 56 ஆயிரமாக அதிகரித்தது. இச்சூழ்நிலையில், நோய்த்தொற்றின் தாக்கம் கட்டுப்படுத்தப்பட்ட பின்னர், பொருளாதாரம் படிப்படியாக மீளும் என எதிர்பார்க்கப்படுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.