பேஸ்புக் கொள்கை இயக்குனர் அங்கிதாஸ் மீது வகுப்புவாத பிரிவினையை தூண்டியதற்காக வழக்குப்பதிவு!

பேஸ்புக் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவின் பொது கொள்கை இயக்குனரான அங்கிதாஸ் மீது பேஸ்புக்கில் வகுப்புவாத பிரிவினையை தூண்டியதற்காக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சத்தீஸ்கரைச் சேர்ந்த பத்திரிகையாளர் அவேஷ் திவாரி. இவர் ராய்ப்பூர் காவல்நிலையத்தில், ஆசியாவின் பொது கொள்கை இயக்குனரான அங்கி தாஸுக்கு எதிராக இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் ஏராளமான பிரிவுகளில் புகாரளித்துள்ளார்.
அவர் தாக்கல் செய்த புகாரில், “மக்களவைத் தேர்தலுக்கு முன்னர் இந்தியாவில் பாஜக அரசின் ஆதரவை பெறுவதற்காக, பல வெறுக்கத்தக்க பேச்சு பதிவுகளை எடுக்க வேண்டாம் என்று தாஸ் தனது ஊழியர்களுக்கு அழுத்தம் கொடுத்தார். சத்தீஸ்கரைச் சேர்ந்த விவேக் சின்ஹா, மற்றும் இந்தூரை சேர்ந்த ராம் சாஹு ஆகியோருடன் இணைந்து, இந்து மற்றும் முஸ்லீம் சமூகங்களிடையே பகைமையை உருவாக்கும் நோக்கில் பதிவுகளை வெளியிடுவதற்கும், பரப்புவதற்கும் அங்கி தாஸ் பேஸ்புக்கைப் பயன்படுத்தினார். மேலும் அங்கிதாஸுக்கு எதிராக பேசியதற்காக சாஹுவும், சின்ஹாவும் தன்னை கொலை செய்து விடுவதாக மிரட்டினார்கள்” என்றும் தனது புகாரில் குற்றம் சாட்டியுள்ளார்.
முன்னதாக அதே நாளில், அங்கிதாஸ் டெல்லி போலீசில், தனக்கு அவேஷ் திவாரி என்பவர் கொலை மிரட்டல்கள் விடுத்ததாகவும், பேஸ்புக்கில் தன்னை பற்றி அவதூறான கருத்துக்களை பதிவிட்டு வருவதாகவும் புகார் அளித்துள்ளார்.
ஸ்வராஜ் எக்ஸ்பிரஸ் என்ற செய்தி சேனலின் மாநில தலைவரான சத்தீஸ்கரைச் சேர்ந்த பத்திரிகையாளர் அவேஷ் திவாரி இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார். அவர் “ஆகஸ்ட் 16 ஆம் தேதி பேஸ்புக்கில் வோல் ஸ்ட்ரீட் பத்திரிக்கையின் கட்டுரையின் அடிப்படையில் , அங்கிதாஸ் குறித்து அந்த பத்திரிகை வெளியிட்டுள்ள குற்றங்களை மட்டுமே பதிவிட்டதாகவும், அவருக்கு தான் எந்த விதமான அச்சுறுத்தல்களையும் செய்யவில்லை” எனவும் கூறினார்.
மேலும் வோல் ஸ்ட்ரீட் பத்திரிக்கை வெளியிட்டுள்ள செய்தியையும் பகிர்ந்துள்ளார். அதில் “பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்களான டி.ராஜா சிங், அனந்த்குமார் ஹெக்டே, மற்றும் கபில் மிஸ்ரா ஆகியோரின் வெறுக்கத்தக்க பேச்சுகள் மீது கட்டுப்பாடுகளை விதிக்க அங்கிதாஸ் தடுத்ததாகவும், பிரதமர் நரேந்திர மோடியின் கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதிகளின் விதிமீறல்களைத் தண்டித்தால், இந்தியாவில் பேஸ்புக்கின் வணிக வாய்ப்புகளை இழக்க நேரிடும்” என்று ஊழியர்களிடம் கூறி அங்கிதாஸ் இந்த யோசனையைத் தடுத்ததாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் அவர் கூறுகையில் ‘நான் ஒருபோதும் அங்கிதாஸுடன் தொடர்பு கொண்டதோ, பேசியதோ இல்லை. அவர் அளித்த புகாரில் ஏன் என் பெயர் வந்துள்ளது என்று எனக்குத் தெரியவில்லை. எனது சக ஊழியர்கள் தான் இதைப்பற்றி எனக்கு தெரிவித்தனர். இது ஒரு மிக முக்கியமான பிரச்சினை, வோல் ஸ்ட்ரீட் பத்திரிகையால் வெளியிடப்பட்ட அறிக்கையின் முக்கிய விவரங்களை மட்டுமே நான் பதிவிட்டேன்.
பிப்ரவரி 2019 முதல் பாரதிய ஜனதா அரசாங்கத்தின் கொள்கைகளை விமர்சிக்கும் எனது பல பதிவுகள் போதுமான விளக்கமின்றி நீக்கப்பட்டுள்ளது. 25 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு பத்திரிகையாளர் என்ற முறையில் கேள்வி கேட்பது எனது கடமை. ஆனால், புல்வாமா தாக்குதல்கள், சி.ஏ.ஏ, என்.ஆர்.சி மற்றும் சத்தீஸ்கரில் நிலவி வரும் பழங்குடியினர் பிரச்சினைகள் உள்ளிட்ட பல பதிவுகள் கடந்த காலங்களில் எனது பேஸ்புக் பக்கத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளன.
பிலாயில் ஒரு பழங்குடி கிளர்ச்சி பற்றிய எனது லைவ் வீடியோ ஒன்று திடீரென, இது வழிகாட்டுதல்களுக்கு எதிரானது என்று நீக்கப்பட்டது. ஆனால் நான் என்ன தவறு செய்தேன் என்பதை ஒருபோதும் விளக்கவில்லை” என்று திவாரி குற்றம் சாட்டினார்.