ஆசிரியையுடன் கள்ளக்காதல்; கணித ஆசிரியர் கொலை

திருப்பத்தூர் மாவட்டத்தில் அரசுப் பள்ளி ஆசிரியர் ஒருவர் சில தினங்களுக்கு முன் தலை நசுக்கப்பட்ட நிலையில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார். ஆசிரியை ஒருவருடனான கள்ளக்காதலால் அப்பெண்ணின் கணவர் கூலிப்படையை ஏவி அவரை கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம், சந்தூரை அடுத்த கங்காவரம் பகுதியை சேர்ந்த ஆசிரியர் சிவக்குமார். ஊத்தங்கரை ஜோதி நகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் கணித ஆசிரியராக இருந்தார். இவர் திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அருகே ராமகிருஷ்ணாபுரத்தில் தலை சிதைக்கப்பட்ட நிலையில் கொடூரமாக கொல்லப்பட்டிருந்தார்.
அவரது செல்போன் தொடர்புகளை விசாரணை செய்ததில் கொலையாளிகளை போலீசார் கண்டுபிடித்தனர். சிவக்குமாருடன் பணிபுரிபவர் அறிவியல் ஆசிரியை லட்சுமி. அப்பெண்ணுடன் சிவக்குமார் அடிக்கடி பேசி வந்தது தெரிந்தது. ஆசிரியையை மற்றும் அவரது கணவர் இளங்கோவை பிடித்து விசாரித்தனர். அப்போது இளங்கோ கூலிப்படையை ஏவி கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.
லட்சுமியுடன் நட்பாக பழகிய சிவக்குமார் பின்னர் அவரை காதல் வலை வீசி கவிழ்த்துள்ளார். இத்தனைக்கும் ஆசிரியை லட்சுமி காதலித்து தான் இளங்கோவை திருமணம் செய்திருந்தார். சிவக்குமாருடன் சேர்ந்து மனைவி உல்லாசமாக இருப்பதை அறிந்த இளங்கோ இருவரையும் கண்டித்துள்ளார். அப்போதும் சிவக்குமார் கேட்கவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த இளங்கோ, கூலிப்படை கும்பலை வைத்து, ஆசிரியர் சிவக்குமாரின் கை கால்களை உடைக்கச் சொல்லி ரூ.1 லட்சம் பணம் தந்துள்ளார். அதன்படி ஊத்தங்கரை இலங்கை அகதிகள் முகாம் பகுதியில் வசித்து வரும் பிரபல ரவுடி வெள்ளைச்சாமி மற்றும் கூட்டாளிகள் பள்ளியிலிருந்து வீடு திரும்பிய ஆசிரியர் சிவக்குமாரை காரில் கடத்திச் சென்று கடுமையாக தாக்கியுள்ளனர்.
பின்னர் அவரை நாட்றம்பள்ளி அருகே ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் காரிலிருந்து தள்ளிவிட்டனர். அவர் சுயநினைவோடு முனகிய படி இருந்துள்ளார். இதனால் எங்கே தங்களை காட்டிவிடுவாரோ என்று பயந்து காரை அவரது தலை மீது ஏற்றி கொன்றுள்ளனர்.
தற்போது ஆசிரியையின் கணவர் இளங்கோ, அவர் நியமித்த கூலிப்படையினர் 8 பேர் என அனைவரையும் போலீசார் கைது செய்தனர். கொல்லப்பட்ட ஆசிரியர் சிவக்குமார் ஏற்கனவே 8-ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கி அதனை பணம் கொடுத்து சரிகட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.