தங்கத்தின் தேவை 30 சதவிகிதம் குறையும்!

கொரோனா வைரசால் நாடு முடக்கப்பட்டுள்ள நிலையில், தங்கத்திற்கான தேவை நடப்பு ஆண்டில் 30 சதவிகிதம் குறையும் என இந்திய வர்த்தக சபை தெரிவித்துள்ளது. இது குறித்து இந்திய வர்த்தக சபை, “நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் துறை நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 7 சதவிகிதப் பங்களிப்பை கொண்டுள்ளது. நம் நாட்டில், திருமணங்களை முன்னிட்டே நகை விற்பனை அதிக அளவில் நடைபெறும். தற்போது பல திருமண நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுகின்றன. இதன் தொடர்ச்சியாக, திருமணத்துக்குத் தேவையான பொருட்களை வாங்குவதும் தடைபட்டு உள்ளது. நடப்பாண்டில் தங்கத்தின் தேவை, 700 – 800 டன் ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கொரோனா வைரஸ் தாக்கத்துக்கு முன்பாகவே, கடுமையான விலை ஏற்ற, இறக்கங்கள், தேவையை அதிகம் பாதித்துள்ளன.
நாட்டின் சமூக, பொருளாதாரத்துக்கும், தங்கத்துக்கும் இடையே வலுவான தொடர்பு இருப்பதால் இந்தியாவின் சராசரி நீண்டகால தங்கத்தின் தேவை, 850 டன் ஆக கணிக்கப்பட்டுள்ளது. தற்போது, வைரஸ் தொற்று பாதிப்பால், தங்கத்தின் கொள்முதல் கடந்த ஆண்டில் செய்யப்பட்ட, 690 டன்னிலிருந்து, 30 சதவிகிதம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆபரணத் துறையில், 50 லட்சத்துக்கும் அதிகமானோர் பணிபுரிகின்றனர். இவர்களது பொருளாதார நிலை, தற்போது கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, தினக்கூலி பணியாளர்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றனர்.மேலும், முன்கூட்டியே செலுத்தப்படும் வரி, தங்கக் கடனுக்கான வட்டி போன்ற பல்வேறு விஷயங்களும், இத்துறையை தற்போது மிகவும் பாதித்துள்ளது.எனவே, முன்கூட்டியே செலுத்தப்படும் வரிக்கு 150 நாட்கள் அரசு சலுகை தர வேண்டும். மேலும், தங்கக் கடன் வட்டி குறைக்கப்பட வேண்டும்.
மத்திய அரசு குறுகிய காலத்துக்கு ஒரு சிறப்பு நிதியை உருவாக்கி, வேலையில்லாமல் இருக்கும் கைவினைஞர்கள் உள்ளிட்டோருக்கு, ஒரு முறை நிதி உதவி வழங்க வேண்டும்” என்று இந்திய வர்த்தக சபை தெரிவித்துள்ளது.