சிறு வியாபாரிகளை மீட்க பிரதமர் மோடியிடம் கோரிக்கை

புதுடில்லி: சிறு வியாபாரிகளை, சரிவில் இருந்து மீட்கும் நடவடிக்கையாக, ரிசர்வ் வங்கி இயக்குனர், சதீஷ் மராதே, பிரதமர் நரேந்திர மோடிக்கு, கடிதம் மூலம், சில பரிந்துரைகளை முன்வைத்துள்ளார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,
‘கொரோனா பரவல் காரணமாக, அனைத்து தொழில்துறைகளும் கடும் பாதிப்பு அடைந்துள்ளன. குறிப்பாக, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறையினர், கடும் சரிவை சந்தித்து வருகின்றனர். இது போன்ற காலகட்டங்களில், சில விதிவிலக்கான முடிவுகளை, எடுக்க வேண்டியது அவசியமாகிறது. தொழில்துறையினரை, நெருக்கடியில் இருந்து மீட்க, அனைத்து வங்கிகளும், தங்கள் கடன் அட்டவணையை மாற்றி அமைக்க வேண்டும்.
வட்டி விகிதங்கள் குறைப்பு, சிறுதொழில் வளர்ச்சி வங்கி மூலம் உத்தரவாதம் அளிப்பது போன்ற நடவடிக்கைகளால், நம் பொருளாதார சரிவை மீட்டெடுத்துவிட முடியாது. வங்கிகளின் பங்களிப்பு தீவிரமாக இருந்தால் மட்டுமே, நம் பொருளாதாரத்தை மீண்டும் கட்டி எழுப்ப முடியும்.’ என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், GST யை சரிபாதியாக ஆக்கினாலே பொதுமக்களின் வாங்கும் சக்தி அதிகரித்து, தொழில்கள் ஏற்றமடையும் என்று வியாபாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.