பான்பராக் போட்டு துப்பினால்…?! மத்திய அரசு எச்சரிக்கை

‘பான் பராக், பீடா போன்ற பொருட்களை சவைத்து, பொது இடங்களில் துப்பினால், கொரோனா வைரஸ் பரவும் வேகம் அதிகரிக்கும். இதுபோன்ற செயலில் ஈடுபடுவோர் மீது, தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என, மாநில அரசுகளுக்கு, மத்திய சுகாதாரத்துறை பரிந்துரை செய்துள்ளது.
அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: புகையிலை பொருட்களான, பான் மசாலா, சுபாரி உள்ளிட்டவற்றை பொதுமக்கள் சுவைத்தால், எச்சில் அதிகம் சுரக்கும். பின் அதைத் துப்ப வேண்டும் என தோன்றும். பொது இடங்களில் எச்சில் துப்புவது, வைரஸ் பரவும் வேகத்தை அதிகரிக்கும். இது போன்ற அத்துமீறலில் ஈடுபடுவோர் மீது, பேரிடர் மேலாண்மை சட்டம் மற்றும் இந்திய தண்டனை சட்டம், 1860 மற்றும் குற்றவியல் நடைமுறை சட்டம் ஆகியவற்றின் கீழ், நடவடிக்கை எடுக்கலாம். வைரஸ் பரவல் அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு, புகையிலை பொருட்களை சுவைத்து, பொது இடங்களில் துப்பக்கூடாது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பீஹார், ஜார்க்கண்ட், தெலுங்கானா, உத்தர பிரதேசம், உத்தரகண்ட், மஹாராஷ்டிரா, ஹரியானா, நாகாலாந்து, அசாம் போன்ற மாநிலங்கள், கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, புகையிலை பொருட்கள் பயன்பாடு மற்றும் பொது இடங்களில் துப்புவதற்கு, ஏற்கனவே தடை விதித்து உள்ளன.
(SOURCE:PTI )