பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் இல்லத்தில் சி.பி.ஐ., விசாரணை

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மரணம் குறித்து விசாரித்து வரும் சி.பி.ஐ., அதிகாரிகள், மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள அவரது வீட்டில் இன்று திடீரென விசாரணை நடத்தினர்.
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத், மும்பையில் உள்ள வீட்டில் அண்மையில் தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக, மும்பை போலீசாரும், சுஷாந்த் தந்தை அளித்த புகாரின்படி பாட்னா போலீசாரும் விசாரித்து வந்தனர். இந்நிலையில், நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணம் தொடர்பான அனைத்து வழக்குகளையும் சி.பி.ஐ.,க்கு மாற்றி, அண்மையில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து, சுஷாந்த் சிங் மரணம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த சி.பி.ஐ., அதிகாரிகள், இது தொடர்பாக, சுஷாந்த்துக்கு நெருக்கமானவர்களிடம் விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், மும்பையில் உள்ள சுஷாந்த் சிங் இல்லத்தில், சி.பி.ஐ., அதிகாரிகள் இன்று விசாரணை நடத்தினர். அவர்களுடன் தடயவியல் நிபுணர்களும் உடன் சென்று விசாரணை நடத்தியதாகக் கூறப்படுகிறது.