இந்தி தெரியாதவர்களை வெளியேறச் சொன்ன ஆயுஷ் அமைச்சக செயலர் – ராமதாஸ் கடும் கண்டனம்

ஆயுஷ் அமைச்சகம் சார்பில் யோகா மற்றும் நேச்சுரோபதி மருத்துவர்களுக்கு நடைபெற்ற இணைய வழி பயிற்சியில், இந்தி தெரியாதவர்களை விலகச் சொன்ன ஆயுஷ் அமைச்சக செயலாளருக்கு தமிழகத்தில் கடும் கண்டனம் எழுந்துள்ளது.

இது தொடர்பாக பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், மத்திய ஆயுஷ் அமைச்சகம் சார்பில் நடத்தப்பட்ட யோகா மற்றும் இயற்கை மருத்துவர்களுக்கான இணையவழி புத்தாக்கப் பயிற்சி முகாமில் இந்தியில் மட்டுமே வகுப்புகள் நடத்தப்பட்டது மட்டுமின்றி, அதைத் தட்டிக் கேட்ட தமிழக மருத்துவர்களை மத்திய ஆயுஷ் அமைச்சக செயலாளர் வைத்ய ராஜேஷ் கொடேச்சா அவமதித்துள்ளார்; மிரட்டியுள்ளார். அதிகார மமதையிலான இந்தச் செயல் கண்டிக்கத்தக்கது.

தமிழ்நாட்டைச் சேர்ந்த 37 மருத்துவர்கள் உள்ளிட்ட சுமார் 400 மருத்துவர்கள் இம்முகாமில் கலந்து கொண்டனர். தொடக்கத்திலிருந்தே பயிற்சியாளர்கள் இந்தி மொழியில் மட்டுமே வகுப்புகளை நடத்தினார்கள். மூன்றாவது நாள் வகுப்பை அமைச்சகத்தின் செயலாளர் வைத்ய ராஜேஷ் கொடேச்சா நடத்தியுள்ளார். அவரும் முழுக்க முழுக்க இந்தி மொழியிலேயே வகுப்பை நடத்தியுள்ளார்.

ஆங்கிலத்தில் நடத்த வேண்டும் என்ற கோரிக்கைக்கு, தமக்கு சரளமாக ஆங்கிலம் பேச வராது, அதனால் இந்தியில் மட்டும் தான் வகுப்பு நடத்த முடியும். இந்தி புரியாதவர்கள் வகுப்புகளை விட்டு வெளியேறலாம் என்று செருக்குடன் கூறியுள்ளார். இதே கொடுமை ஆந்திரம், தெலங்கானா, கேரளா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த மருத்துவர்களுக்கும் நடந்துள்ளது.

இந்தி பேசுபவர்கள்தான் இந்தியாவின் எஜமானர்கள் போலவும், இந்தி தெரியாத தமிழ் உள்ளிட்ட தென்மாநில மொழிகளைப் பேசுபவர்கள் கொத்தடிமைகள் போலவும் மத்திய அரசின் உயர்பதவிகளில் இருப்பவர்கள் நினைத்துக் கொள்வது ஆபத்தானது; ஜனநாயகப் பண்பற்றது.

தமிழக மருத்துவர்களை அவமானப்படுத்தி, மிரட்டிய மத்திய ஆயுஷ் அமைச்சக செயலாளர் கொடேச்சாவுக்கு தமிழக அரசு கண்டனம் தெரிவிக்க வேண்டும். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுத வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x