இனி இந்தியாவில் செல்ல எங்குமே ‘இ-பாஸ்’ கிடையாது!!!

மாநிலங்கள் இடையே மற்றும் மாநிலத்துக்குள் பயணிக்க எந்த கட்டுப்பாடும் விதிக்கக் கூடாது என்று அனைத்து மாநில தலைமை செயலர்களுக்கும் உள்துறை செயலாளர் கடிதம் எழுதியுள்ளார்.
நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு, வரும் 31-ம் தேதி வரை அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகம் போன்ற சில மாநில அரசுகள், மாநிலங்களுக்கு இடையே மற்றும் மாநிலத்திற்குள் பயணிக்க இ-பாஸ் கட்டாயம் என்று அறிவித்துள்ளன. இதனால், பொதுமக்கள் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.
இந்நிலையில், அனைத்து மாநில செயலாளர்களுக்கு மத்திய உள்துறை செயலாளர் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
மத்திய அரசு அறிவித்துள்ள தளர்வுகளுடன்படி, மாநிலங்கள் இடையே மற்றும் மாநிலத்திற்குள் பயணிக்க எந்த கட்டுப்பாடும் விதிக்கக்கூடாது. மாநிலங்களுக்குள்ளும், வெளியேயும் மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தக் கூடாது. பொதுமக்கள் மற்றும் சரக்கு வாகனங்கள் செல்ல அனுமதி அளிக்கலாம்.
பயணத்திற்கென தனியாக அனுமதி, ஒப்புதல், இ-பாஸ் போன்றவை கூடாது. அவ்வாறு செய்வது மத்திய அரசின் உத்தரவை மீறுவதாகும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.