“கொரோனாவைக் கட்டுப்படுத்த அமெரிக்காவில் முழு ஊரடங்கை அமல்படுத்த தயார்” ஜோ பிடன்!

கொரோனாவைக் கட்டுப்படுத்த அமெரிக்காவில் முழு ஊரடங்கை அமல்படுத்தவும் தான் தயாராக இருப்பதாக ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பிடேன் கூறியுள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றால் அதிக பாதிப்புகள் மற்றும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ள நாடுகள் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அதிபர் டிரம்ப் நிர்வாகம் தவறிவிட்டதாக ஜனநாயக கட்சி தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறது. மேலும், பொருளாதாரத்தில் மட்டுமே டிரம்ப்பின் கவனம் இருப்பதாகவும், மக்கள் நலனில் அக்கறை இல்லை என்றும் எதிர்க்கட்சியினர் விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில், நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடக்க இருக்கிறது. இதில், டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஜனநாயக கட்சியின் ஜோ பிடேன் போட்டியிடுகிறார். சமீபத்தில் தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் ஜோ பிடன் கூறுகையில், “கொரோனா பாதிப்பில் இருந்து நாட்டை காப்பாற்ற தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க தான் தயாராக இருக்கிறேன். வைரஸைக் கட்டுப்படுத்தும் வரை நாட்டை பழைய நிலைக்கு கொண்டு செல்ல முடியாது. நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்த வல்லுநர்கள் பரிந்துரைத்தால் அதனையும் செய்ய தயார்.” இவ்வாறு அவர் கூறினார்.