நள்ளிரவில் திட்டக்குடிக்கு வந்து சேர்ந்த ரஷ்யாவில் இறந்த தமிழக மாணவரின் உடல்!
ரஷ்யாவில் இறந்த திட்டக்குடியைச் சேர்ந்த மருத்துவ மாணவரின் உடல் நேற்று நள்ளிரவு சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது.
கடலுார் மாவட்டம், திட்டக்குடியைச் சேர்ந்தவர் ராமு மகன் விக்னேஷ், 23; இவர் கடந்த 5 ஆண்டுகளாக ரஷ்யாவில் உள்ள வால்கோ கிராட் ஸ்டேட் மருத்துவ பல்கலைக்கழகத்தில் மருத்துவம் படித்து வந்தார். படிப்பு முடிய இன்னும் ஆறு மாதங்களே இருந்த நிலையில் கடந்த 9ம் தேதி ரஷ்யாவில் உள்ள ஓல்கா நதியில் நண்பர்களுடன் குளிக்க சென்றார். அப்போது எதிர்பாராத விதமாக நதி சுழற்சியில் சிக்கி விக்னேஷ் உள்ளிட்ட நான்கு பேர் இறந்தனர்.
இறந்து போன மாணவர்களின் உடலை தமிழகத்திற்கு கொண்டு வர மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து 12 நாட்களுக்கு பின்பு மாணவர்களின் உடல் சென்னை விமான நிலையத்திற்கு நேற்று மாலை வந்தடைந்தது. மாணவர்களின் உடல், அரசு தரப்பிடமிருந்து மாணவர்களின் உறவினர்கள் மற்றும் பெற்றோரிடம் நேற்றிரவு 7.40 மணியளவில் ஒப்படைக்கப் பட்டது.
இதையடுத்து மாணவர்களின் உடல் தனித்தனி வாகனங்களில் அவரவரது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கடலுார் மாவட்டம், திட்டக்குடியைச் சேர்ந்த மருத்துவ மாணவர் விக்னேஷின் உடல் நள்ளிரவு நேரத்தில் சொந்த ஊருக்கு வந்து சேர்ந்தது.