“கொரோனாவில் இருந்து குணமடைவோரின் விகிதம் அதிகமாக உள்ளது” – மத்திய சுகாதாரத்துறை!

உலக நாடுகளை ஒப்பிடுகையில், இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைவோரின் விகிதம் அதிகமாக உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் இறப்பு விகிதம் 1.87 சதவீதமாக இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் கூறியுள்ளார். அதே நேரத்தில் உலகிலேயே இந்தியாவில் கொரோனாவில் இருந்து மீண்டு வருபவர்களின் விகிதம் அதிகமாக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதுவரை சுமார் 75% பேர் குணமடைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். இந்தியாவில் 1,511 பரிசோதனை மையங்கள் இருப்பது மிகப்பெரிய சாதனை என்றும் கூறியுள்ளார்.
அவர் மேலும் பேசுகையில், ‘ஜூலை- ஆகஸ்ட் மாதத்திற்குள் இந்தியாவில் கொரோனா பாதிப்பு 300 மில்லியனை அடைந்திருக்கும் என நிபுணர்கள் கூறினார்கள். ஆனால் இந்தியாவில் தற்போது மூன்று மில்லியனுக்கும் குறைவான வழக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன. அதில் 2.2 மில்லியன் பேர் தொற்றில் இருந்து மீண்டு வந்துள்ளனர். அதேபோல் நாளொன்றுக்கு 10 லட்சம் பேருக்கு பரிசோதனை செய்ய வேண்டும் என்ற இலக்கை குறித்த காலத்திற்குள் அடைந்திருக்கிறோம்.
கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை உருவாக்கி அதனை உலக நாடுகளுக்கு வழங்க இந்திய விஞ்ஞானிகள் கடுமையாக உழைத்து வருகிறார்கள். பரிசோதனையில் உள்ள மூன்று தடுப்பூசிகளில் ஒன்று முன்னேற்றத்தை கண்டுள்ளது. இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட கொரோனா உயிரிழப்புகளில் மகாராஷ்டிரா, தமிழ்நாடு, கர்நாடகா ஆகியவை முதல் மூன்று இடங்களில் உள்ளன’ என்று கூறியுள்ளார்.