விநாயகருக்கு ஏற்றிய விளக்கால் விவசாயி வீடு எரிந்து சேதம்!
![](https://thambattam.com/storage/2020/08/FIRE-2-1582995243.jpg)
கிருஷ்ணகிரி அருகே விநாயகர் சதுர்த்திக்காக விளக்கேற்றியவரின் வீடு தீப்பிடித்து எரிந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியை அடுத்த கீழ்மைலம்பட்டி கிராமத்தை சேர்ந்த விவசாயி ராஜா. இவர், தனது நிலத்தில் குடிசை வீடு அமைத்து குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் இன்று விநாயகர் சதுர்த்தி என்பதால் காலை விநாயகர் படத்திற்கு பூஜை செய்து விளக்கேற்றிய ராஜா, அதனை அணைக்காமல் வீட்டை பூட்டிவிட்டு விவசாய பணிக்காக குடும்பத்தினர் அனைவரையும் அழைத்துச் சென்றுள்ளார்.
அப்போது எதிர்பாராத விதமாக விளக்கிலிருந்த தீ, குடிசையில் பற்றி வீடு மளமளவென எரியத்தொடங்கியுள்ளது. அதனைக் கண்ட அக்கம்பக்கத்தினர், உடனடியாக தீயை அணைக்கச்சென்ற போது, தீ வேகமாக பரவியதால் கேஸ் சிலிண்டரும் வெடித்துள்ளது. இதன் காரணமாக யாராலும் அருகில் செல்ல முடியவில்லை. பின்னர் சம்பவம் தொடர்பாக தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர்.
இந்த தீவிபத்தில் ஒரு இரு சக்கர வாகனம், 10 மூட்டை நெல், பீரோ, கட்டில், லேப்டாப், டி.வி மற்றும் ரூ.70,000 ரொக்கம் உள்ளிட்டவை முற்றிலும் எரிந்து சேதமானது. மேலும், பீரோவிலிருந்த பத்திரம், சான்றிதழ்கள், ரேசன் கார்டு, ஆதார் கார்டு உள்ளிட்ட அரசின் அனைத்து ஆவணங்களும் எரிந்து சேதமானதால் ராஜாவின் குடும்பத்தினர் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.