தடையை எதிர்த்து வழக்கு தொடர டிக் டாக் முடிவு

டிக் டாக் செயலியை செப்., 15-க்குள் அமெரிக்க நிறுவனத்துக்கு விற்கவில்லை என தடை செய்யப்படும் என டிரம்ப் உத்தரவிட்டிருந்த நிலையில், அதை எதிர்த்து டிக் டாக் வழக்கு தொடர உள்ளது.
அமெரிக்க அதிபர் டிரம்ப், சீனாவுடன் வர்த்தக போரில் ஈடுபட்டு வருகிறார். அதன் ஒரு பகுதி அந்நாட்டில் 8 கோடி பயனர்களை உடைய டிக் டாக் செயலிக்கு தடை விதிக்கும் நிர்வாக உத்தரவில் ஆக., 6-ல் கையெழுத்திட்டார்.
அதில், ‘அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு, வெளியுறவுக் கொள்கை மற்றும் பொருளாதாரத்துக்கு டிக் டாக் அச்சுறுத்தலாக உள்ளது. அரசு ஊழியர்களின் இருப்பிடங்களை கண்காணிக்கவும், உளவு பார்க்கவும் இந்த செயலியை சீனாவால் பயன்படுத்த முடியும்.’ என்று கூறி 45 நாட்களுக்குள் அமெரிக்க நிறுவனத்துக்கு விற்க கெடு விதித்திருந்தார்.
இந்நிலையில் டிக் டாக் நிர்வாகம் டிரம்பின் இந்த உத்தரவை எதிர்த்து நீதிமன்றத்தை நாட உள்ளது. அவர்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், உண்மை குறித்து டிரம்ப் நிர்வாகம் கவனம் செலுத்தவில்லை. எங்கள் நிறுவனம் மற்றும் பயனர்கள் நியாயமான முறையில் நடத்தப்படுவதை உறுதி செய்வதற்காக நீதித்துறையை நாடுவதை தவிர எங்களுக்கு வேறு வழியில்லை என்று கூறியுள்ளது.
அதே போல் சீனாவின் டென்சென்ட் நிறுவனத்திற்கு சொந்தமான வீசாட் செயலியும் டிரம்பின் தடைக்கு எதிராக வெள்ளியன்று தனியாக ஒரு வழக்கை தாக்கல் செய்துள்ளது. பேஸ்புக் மற்றும் வாட்ஸ்ஆப் செயலி தடை செய்யப்பட்டுள்ள சீனாவில் வீசாட் சமூக ஊடகம் மிகவும் பிரபலமாகும்.