ஊரடங்கு தளர்வு 3.0 – ஆகஸ்ட் முதல் தியேட்டர்கள் திறக்க அனுமதி?

மூன்றாம் கட்ட ஊரடங்கு தளர்வுகளில் தியேட்டர்கள், ஜிம்கள், பயிற்சி வகுப்புகள் போன்றவற்றிற்கு அனுமதி அளிப்பது தொடர்பாக மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பைக் கட்டுப்படுத்தும் வகையில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகிறது. மார்ச் மாதம் இந்தியாவில் ஊரடங்கு அமலுக்கு வந்தது. மே மாதம் வரை தொடர்ந்து கட்டுப்பாடுகள் நீடித்து வந்த நிலையில் ஜூன் முதல் அன்லாக் என்ற பெயரில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
ஜூன், ஜூலை மாதங்களில் முறையே அன்லாக் 1.0, அன்லாக் 2.0 விதிமுறைகள் அமலான நிலையில் வரும் ஜூலை 31ஆம் தேதியுடன் இவை முடிவுக்கு வரவுள்ளன. இந்த சூழலில் அன்லாக் 3.0 குறித்து எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மக்கள் அனைவரும் ஊரடங்கினால் கடும் இன்னல்களை அனுபவித்து வருகின்றனர். ஊரடங்கினால் கொரோனா தொற்று பரவல் குறைந்ததாக தெரியவில்லை. எனவே இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப மக்கள் விரும்புகின்றனர்.

வெளிநாடுகளில் எல்லாம் ஒரு மாத ஊரடங்கையே தாங்கிக் கொள்ள முடியாமல் மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தினர். மாறாக நம் ஊரில் ஊரடங்கு நேரத்தை கடந்து கடை திறந்து வைத்திருந்த தந்தை மகனை அடித்துக் கொன்ற கொடூரங்கள் நடந்தன. இதை எல்லாம் மனதில் வைத்து மூன்றாம் கட்ட தளர்வுகளில் பல்வேறு வணிகங்களை திறக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அந்தந்த பகுதி சூழலுக்கு ஏற்ப மாநிலங்கள் இவற்றில் கட்டுப்பாடுகளை விதித்துக்கொள்ளலாம் என கூறியுள்ளது.
குறிப்பாக திரையரங்குகளை மீண்டும் திறக்க, உள்துறை அமைச்சகத்துக்கு, மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் முன்மொழிந்துள்ளது. 50 சதவீத இருக்கைகளுடன் சினிமா திரையரங்குகளை திறக்க உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் 25% மட்டுமே முதலில் அனுமதிக்கப்படும் என தெரிகிறது.